பரிசோதனை தடுப்பூசி போட்ட நிலையில் ஹரியாணா அமைச்சருக்கு கரோனா வைரஸ் தொற்று

அனில் விஜ்
அனில் விஜ்
Updated on
1 min read

பரிசோதனை தடுப்பூசி போட்டுக் கொண்ட ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ்ஜுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ‘கோவேக்ஸின்' என்றபெயரில் கரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை கடந்த நவம்பர் 16-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் 22 நகரங்களில் 26,000 தன்னார்வலர்கள் பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக ஹரியாணாவின் அம்பாலா கன்டோன்மென்ட் மருத்துவமனையில் கோவேக்ஸின் தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த நவம்பர் 20-ம் தேதி ஹரியாணாவின் சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் (67) தன்னார்வலராகப் பங்கேற்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "எனக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அம்பாலா கன்டோன்மென்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளேன். என்னோடு தொடர்பில் இருந்தவர்கள், கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவேக்ஸின் தடுப்பூசி 2 முறை போட வேண்டிய தடுப்பூசி ஆகும். அமைச்சர் அனில் விஜ்ஜுக்கு முதல் தடுப்பூசி மட்டுமே போடப்பட்டுள்ளது. இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு குறிப்பிட்ட நாட்கள் கழித்த பிறகே உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவேக்ஸின் தடுப்பூசி, 2 முறை போட வேண்டிய தடுப்பூசியாகும். முதல் தடுப்பூசி போட்ட பிறகு 28 நாட்கள் கழித்து இரண்டாவது தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். அதன்பின் 14 நாட்களுக்குப் பிறகே உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

கரோனா தடுப்பூசி பரிசோத னையின்போது 50 சதவீதம் பேருக்கு உண்மையான தடுப்பூசி போடப்படும். மீதமுள்ள 50 சதவீதம் பேருக்கு பாசாங்கு (டம்மி) தடுப்பூசி போடப்படும். யாருக்கு உண்மையான தடுப்பூசி போடப்பட்டது? யாருக்கு பாசாங்கு தடுப்பூசி போடப்பட்டது என்பது நிறுவனத்துக்கோ, தன் னார்வலர்களுக்கோ தெரியாது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற குழுவுக்கு மட்டுமே முழுமையான விவரங்கள் தெரியும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in