

அனைத்து அமைச்சர்களையும் நம்புகிறேன். யாருடைய தொலைபேசியையும் ஒட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே நேற்று கூறும்போது, "சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு வலுவாக உள்ளது. அனைத்து அமைச்சர்களும் சிறப்பாக பணியாற்றுகின்றனர். அவர்களை முழுமையாக நம்புகிறேன். யாருடைய தொலைபேசி அழைப்புகளையும் ஒட்டு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களுடைய நல்லாட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்" என்றார்.
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, "ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கொள்கை முரண்பாடு கொண்டவை. இதுபோன்ற கூட்டணி அரசுகள் 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யாது" என்றார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறும்போது, "இந்திய விவசாயிகளின் பிரச்சினையை கனடா பிரதமர் புரிந்து கொள்கிறார். ஆனால் மத்திய அரசுக்கு புரியவில்லை. கரோனா வைரஸ் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.