Published : 05 Dec 2020 03:15 AM
Last Updated : 05 Dec 2020 03:15 AM

ரூ.7.4 கோடி பரிசுத் தொகையுடன் இந்தியருக்கு சர்வதேச ஆசிரியர் விருது: இறுதிப்போட்டியில் பங்கேற்ற மற்ற 9 பேருக்கு 50% பணத்தை வழங்க முடிவு

ரஞ்சித் சிங் திசாலே

மும்பை

இந்தியாவின் மகாராஷ்டிராவை சேர்ந்த அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் ரஞ்சித் சிங் திசாலேவுக்கு (32), ரூ.7.4 கோடி பரிசுத் தொகையுடன் சர்வதேச ஆசிரியர் விருது கிடைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயை தலைமை இடமாகக் கொண்டு 'வர்க்கி குரூப்' நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சன்னி வர்க்கி கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 2010-ம் ஆண்டில் சன்னி வர்க்கி, லண்டனை தலைமை இடமாகக் கொண்டு 'வர்க்கி பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளையை உருவாக்கினார். இந்த அறக்கட்டளை சார்பில் கடந்த 2015 முதல் ஆண்டுதோறும் சர்வதேச ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு விருதுக்கு சுமார் 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் இறுதியாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இத்தாலி, பிரேசில், வியட்நாம், பிரிட்டன், தென் கொரியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த ஆசிரியர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றனர். அவர்களில் இந்திய ஆசிரியர் ரஞ்சித் சிங் திசாலே சர்வதேச ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

பிரிட்டன் நடிகர், எழுத்தாளர் ஸ்டீபன் பிரை, காணொலி வாயிலாக திசாலேவின் பெயரை அறிவித்தார். அப்போது காணொலி மூலம் இணைந்திருந்த ஆசிரியர் திசாலே மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார். அவருக்கு இருபுறமும் அமர்ந்திருந்த தாயும் தந்தையும், திசாலேவை உச்சி முகர்ந்து வாழ்த்தினர்.

மகாராஷ்டிராவின் சோலாபூர் மாவட்டம், பரத்வாடே பகுதி அரசு தொடக்கப் பள்ளியில் ரஞ்சித் சிங் திசாலே ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இங்கு கன்னட மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். பொதுவாக பெண் குழந்தைகளை யாரும் படிக்க அனுப்புவது கிடையாது. இந்த அவல நிலையை ரஞ்சித் சிங் திசாலே மாற்றினார். அவர் முதலில் கன்னட மொழியை கற்றார். அந்த மக்களோடு அவர்களது தாய்மொழியில் பேசி, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். இதன்மூலம் பெண் குழந்தைகளை, பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப தொடங்கினர்.

அதோடு மட்டுமன்றி பள்ளி பாடங்களில் கியூஆர் கோடு நடைமுறையை அறிமுகப்படுத்தினார். மாணவ, மாணவிகளுக்கு எளிதில் புரியும்படி வீடியோ, ஆடியோ மூலம் பாடங்களை நடத்தினார். அவர் மூலம் பரத்வாடே பகுதி இன்று கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் கிராமமாக மாறியுள்ளது.

சர்வதேச ஆசிரியர் விருதுடன் திசாலேவுக்கு ரூ.7.4 கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘ஆசிரியர்களால் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனக்கு கிடைத்த பரிசுத் தொகையில் 50 சதவீத தொகையை இறுதி போட்டிக்கு தேர்வு செய்ப்பட்ட இதர 9 ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்வேன்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x