ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதிரொலி: சென்செக்ஸ் முதல்முறையாக 45 ஆயிரம் புள்ளியை கடந்தது

ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதிரொலி: சென்செக்ஸ் முதல்முறையாக 45 ஆயிரம் புள்ளியை கடந்தது
Updated on
1 min read

வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்பட மாட்டாது என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது.

ஒரு கட்டத்தில் பங்குச் சந்தை 45 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து 45,128-ஐ தொட்டது. இதற்கு முன்பு பங்குச் சந்தை குறியீட்டெண் 45 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது கிடையாது. இத்தகைய எழுச்சி காணப்பட்டது இதுவே முதல் முறை. வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் எப்எம்சிஜி தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.

வர்த்தகம் முடிவில் 447 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 45,080 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையில் 125 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 13,259 புள்ளிகளானது.

ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ரா செம்கோ, சன் பார்மா, பார்தி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யுனி லீவர், எஸ்பிஐ மற்றும் எல் அண்ட் டி பங்குகள் 4.20 சதவீதம் வரை உயர்ந்தன. ரிலையன்ஸ், பஜாஜ் பின்சர்வீசஸ், ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎப்சி, என்டிபிசி ஆகிய நிறுவன பங்குகள் 0.86 சதவீதம் வரை சரிந்தன. தேசிய பங்குச் சந்தையில் அனைத்து வங்கிகள், தனியார் வங்கிகள், எப்எம்சிஜி மற்றும் உலோக நிறுவன பங்குகள் 2.05 சதவீதம் வரை உயர்ந்தன.

நிதிக் கொள்கையை அறிவித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ், கரோனா வைரஸ் தடுப்பூசி வெளிவருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக குறிப்பிட்டார். இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டது. இதன் விளைவாக பங்குகள் விலை கணிசமாக உயர்ந்தன.

மேலும் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் ஜிடிபி முன்னர் கணித்திருந்த மைனஸ் 9.5 சதவீதத்துக்கு பதிலாக மைனஸ் 7.5 சதவீதமாக இருக்கும் என அவர் தெரிவித்ததும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in