ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் இழுபறி:  டிஆர்எஸ் அதிக இடங்களில் வெற்றி; ஒவைசி கட்சியை பின்னுக்கு தள்ளியது பாஜக

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் இழுபறி:  டிஆர்எஸ் அதிக இடங்களில் வெற்றி; ஒவைசி கட்சியை பின்னுக்கு தள்ளியது பாஜக
Updated on
1 min read

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் டிஆர்எஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் பாஜக இரண்டாவது இடத்தை பிடித்து. ஒவைசி கட்சியை பின்னக்கு தள்ளியது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தீவிரமாகப் பிரச்சாரம் செய்தன.

பாஜக சார்பில் அக்கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.

பாஜக எத்தனை இடங்களில் வென்றுவிடும் என்று பார்க்கிறேன் என்று பிரதமர் மோடிக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி சவால் விடுத்தார்.

அதைத் தொடர்ந்து நடந்த பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை அரசியல் கட்சித் தலைவர்கள் பயன்படுத்துவது அதிகரித்தது. அசாசுதீன் ஒவைசியை நவீனகால முகமது அலி ஜின்னா என்று பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. சூர்யா விமர்சித்தார்.

இதனால் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் மிகப்பெரிய கவுரவத் தேர்தலாகப் பார்க்கப்பட்டது. இந்தநிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் 30 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தொடக்கத்தில் தபாலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வழக்கமான தபால் வாக்குகளை தவிர தற்போது கரோன சூழல் என்பதால் வயதானவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது.

தபால் வாக்குகளில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெறத் தொடங்கியது. இரண்டாவது இடத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி இருந்தது. இந்தநிலவரப்படி பாஜக 88 வார்டுகளிலும், டிஆர்எஸ் 32 வார்டுகளிலும் முன்னிலையில் இருந்தது. எஐஎம்ஐஎம் கட்சி 17 வார்டுகளில் முன்னிலை பெற்றிருந்தது.

இதன் பிறகு வழக்கமான வாக்குச்சீட்டுகள் மூலம் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் நிலவரம் தலைகீழானது. ஆளும் டிஆர்எஸ் கட்சி முன்னிலை பெற்றது. மொத்தமுள்ள 150 இடங்களில் 146 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டிஆர்எஸ் 55 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. இருப்பினும் பெரும்பான்மைக்கு தேவையான 75 இடங்களை பெற முடியாத சூழலில் அக்கட்சி உள்ளது.

இரண்டாவது இடத்தில் பாஜக 46 இடங்களிலும், ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 42 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in