

நமது கடலோர எல்லைகளை அச்சமின்றிக் காப்பவர்கள் நம் கடற்படை வீரர்கள் என்று இந்திய கடற்படை தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1971ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்தபோது, கராச்சி துறைமுகத்தின் மீது இந்திய கடற்படை நடத்திய தாக்குதலை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
"நமது வீரம் நிறைந்த கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு கடற்படை தின வாழ்த்துகள்.
இந்திய கடற்படை வீரர்கள் அச்சமின்றி நமது கடலோர எல்லைகளைக் காப்பவர்களாகத் திகழ்கிறார்கள். மேலும், தேவைப்படும் காலங்களில் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் செய்து வருகிறார்கள்.
பல நூற்றாண்டுகள் பெருமையைக் கொண்ட இந்தியாவின் வளமான கடல் பாரம்பரியத்தையும் இத்தருணத்தில் நாம் நினைவுகூர்வோம்.''
இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.