

வங்கக் கடலில் உருவாகி பாம்பன் பகுதியிலிருந்து கேரள கடற்பகுதிக்குச் செல்லும் புரெவி புயலை எதிர்கொள்ள கேரள அரசு முழுவீச்சில் தயாராகியுள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையம் இன்று 8 மணி நேரம் மூடப்பட உள்ளது. 5 மாவட்டங்களுக்குப் பொது விடுமுறை அளிக்கப்பட்டு, 2 ஆயிரம் முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதுவரை 217 தற்காலிக முகாம்கள் உருவாக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசித்த 15,840 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே புரெவி புயல் இன்று பிற்பகலில் வலுவிழந்த நிலையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயல் கேரளப் பகுதிக்குள் நுழைந்து அரேபியக் கடலுக்குள் செல்கிறது.
கேரளப் பகுதிக்குள் செல்லும் புரெவி புயலை எதிர்கொள்ள கடந்த 3 நாட்களாக கேரள அரசு தரப்பில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் உயர்மட்ட அளவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, மீட்புப் படையினர், பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்புகொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தொலைபேசியில் பேசினார். அப்போது மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யத் தயாராக இருப்பதாக அமித் ஷா, முதல்வர் பினராயி விஜயனிடம் உறுதியளித்துள்ளார்.
கேரளப் பகுதிக்குள் நுழையும் புரெவி புயல் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டங்களில் மிக கனமழை 3-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை காற்றுடன் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையம் இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை மூடப்பட்டுள்ளது.
கேரளாவில் அடுத்த சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால், பிரச்சாரப் பதாகைகள், பேனர்கள் மக்களுக்கு இடையூறு இல்லாமல் வைக்குமாறும், அவ்வாறு பெரிதாக இருந்தால் அகற்றுமாறும் அரசின் சார்பில் அரசியல் கட்சிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம் பகுதிக்குள் நுழையும் என்று முதல்வர் பினராயி விஜயன் நேற்று ஊடகத்தினர் மத்தியில் தெரிவித்தார்.
புரெவி புயலை எதிர்கொள்ளும் வகையிலும் அசாதாரண சூழல் ஏற்பட்டாலும் மீட்புப் பணியில் ஈடுபட போலீஸார், தீயணைப்புப் படையினர், பேரிடர் மீட்புக் குழுக்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளனர் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
மேலும், 25 வீரர்கள் கொண்ட 12 ராணுவப் படையும் பாங்கோட் ராணுவத் தளத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எம்-17, சாரங் ரக ஹெலிகாப்டர்கள், ஏஎன்32 ரக விமான நிலையங்கள் கோவை சூலூர் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
விழிஞ்சம் துறைமுகத்தில் கப்பற்படை தரப்பில் இரு கப்பல்களும், 2 பெரிய படகுகளும் மீட்புப் பணிக்குத் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
புரெவி புயல் கேரளப் பகுதிக்குள் நுழைவதையடுத்து, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ஒருநாள் பொதுவிடுமுறையை கேரள அரசு அறிவித்துள்ளது.