

கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சீனா உட்பட எவ்வித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள இந்தியக் கடற்படை தயார் நிலையில் உள்ளது. கடற்பகுதியில் போர்க்கப்பல்களுடன் போர் விமானங்களின் பலமும் நமக்கு அவசியம்.நாடு பொருளாதார பலம் பெறுவதற்கு கடற்பகுதி பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இதற்கு விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் மிகவும் அவசியம். தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் 3 சீன போர்க் கப்பல்கள் உள்ளன. கடற்கொள்ளையர்களுக்கு எதிரான ரோந்துப் பணிக்காக கடந்த 2008 முதல் இவற்றை சீனா பராமரித்து வருகிறது.
சீன எல்லைப் பிரச்சினையும் கரோனா பரவலும் நாட்டுக்கு புதியசவால்களாக உள்ளன. இரண்டையும் எதிர்கொள்ள கடற்படை தயாராக உள்ளது. ராணுவம் மற்றும் விமானப் படையுடன் மிகவும் ஒருங்கிணைந்து கடற்படை செயல்படும். கிழக்கு லடாக்கில் சீன எல்லைப் பகுதியில் இந்திய கடற்படையின் பி-81 கண்காணிப்பு விமானமும் ஹெரோன் ட்ரோன்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
ட்ரோன் தாக்குதலுக்கு எதிரான ஸ்மாஷ்-2000 ரைபில்களை இந்திய கடற்படை கொள்முதல் செய்யவுள்ளது. இதுபோல் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைக்காக 30 ப்ரீடேட்டர் ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இந்த ட்ரோன்கள் மிகுந்த செயல்திறன் கொண்டவை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.