

புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ள ரஜினி, தமிழகத்தின் சிராக் பாஸ்வானாகக் கருதப்படுகிறார். திராவிடக் கட்சிகளின் வாக்குகள் இவர் மூலம் பிரிவதால், தமிழக தேர்தலில் பாஜக பலம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் புதிதாக தோன்றும் கட்சிகளால், 2 முக்கிய திராவிடக் கட்சிகளின் வாக்குகள் பிரியும் நிலை உள்ளது. எனவே, புதிய கட்சிகளால் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவிதமான தாக்கம் ஏற்படும் என்று தெரியவில்லை.
இந்தச் சூழலில் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த், புதிய கட்சி தொடங்கப் போவதாக நேற்று அறிவித்தார். எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட போவதாகவும் கூறியுள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்புக்கு பாஜக.வின் பின்னணி இருப்பதாக தேசிய அரசியலில் பேசப்படுகிறது.
பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்த சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. பிஹாரில் என்டிஏ-வுக்கு தலைமை வகிக்கும் முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சியை வலுவிழக்கச் செய்யும் பாஜக.வின் ராஜதந்திர அரசியல் காரணமாகவே சிராக் பாஸ்வான் தனித்துப் போட்டியிடுவதாகக் கூறப்பட்டது.
இதில் எதிர்பார்த்தபடி பாஜக.வை விட நிதிஷின் வாக்குகள் குறைந்தன. நிதிஷ் குமார் 7-வது முறையாக முதல்வராக பதவியேற்றாலும் அவருக்கு இணையாக பாஜக தனது 2 தலைவர்களை துணை முதல்வர் ஆக்கியது. அதேசமயம், பிஹாரின் 243 தொகுதிகளில் 135-ல் போட்டியிட்ட சிராக் பாஸ்வான் கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
இவரது தந்தை மறைந்த ராம்விலாஸ் பாஸ்வான் வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தனது கட்சியின் முன்னாள் துணை முதல்வர் சுசில் குமாருக்கு பாஜக அளித்தது. தற்போது தனது தந்தை வகித்த அமைச்சர் பதவி தனக்கு கிடைக்குமா என மக்களவை எம்.பி.யான சிராக் காத்திருக்கிறார்.
இவரைப் போல தமிழகத்தில் வாக்குகளை பிரிப்பவராக ரஜினி கருதப்படுகிறார். இதனால் பாஜக பலன் அடையும் வாய்ப்புகள் தெரிகின்றன. இதன் பின்னணியில் பிஹாரில் செய்ததை போன்ற பாஜக தலைமையின் ராஜதந்திர அரசியல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டாரத்தில் கூறும்போது, “ரஜினி எங்களுடன் கூட்டணி வைத்தால் அவரை முதல்வர் வேட்பாளர் ஆக்குவோம். இதற்கு ரஜினி ஒப்புக்கொள்ளா விட்டாலும் அவரால் வாக்குகள் பிரிந்து பாஜக.வுக்கு லாபமாகவே அமையும். திமுக.வை விட அதிமுக.வில் ரஜினிக்கு வாக்குகள் அதிகம் உள்ளன. எனவே ரஜினியின் அரசியல் பிரவேசம் அதிமுக.வுக்கு தொகுதிகளை குறைக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அதிமுக அல்லது ரஜினி கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்தாலும் அல்லது இல்லை என்றாலும் தமிழகத்தில் எங்களுக்கு கணிசமான தொகுதிகள் உறுதி. இதற்கு சிராஸ் பாஸ்வானைப் போல வரும் தேர்தலில் ரஜினி எங்களுக்கு உதவுவார்” என்று தெரிவித்தனர்.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் கூட்டணி வைத்த பாஜக, தற்போது அந்தக் கட்சிகளை விட வளர்ந்துவிட்டது. அந்த வரிசையில் தமிழகத்தில் பாஜக.வை அதிக முறை கூட்டணியில் சேர்த்துக் கொண்ட அதிமுக, ரஜினி கட்சியால் சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.