

புரெவிப் புயல் காரணமாக கேரளாவில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உயரதிகாரிகளுடனான அவசரக் கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் தனது சமீபத்திய செய்திக்குறிப்பில், புரெவி டிசம்பர் 4 ஆம் தேதி கேரளாவில் நிலச்சரிவை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெற்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு கேரள கடற்கரைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை மற்றும் சூறாவளி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
டிசம்பர் 3 முதல் 5 வரை திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. இதனால் கேரள அரசு மிகுந்த எச்சரிக்கை அடைந்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் எட்டு அணிகள் கேரளாவுக்கு வந்துசேர்ந்துவிட்டன. விமானப்படை தயார் நிலையில் உள்ளது. மீட்புப் படையினர் தயாராக இருக்குமாறும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (எஸ்.டி.எம்.ஏ) மற்றும் பிற துறைகளின் உயர் மட்டக் கூட்டத்திற்கு முதல்வர் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.