பிஹார் தேர்தலில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டு சோதனையில் வித்தியாசம் இல்லை: மாநிலத் தேர்தல் ஆணையம் தகவல்

பிஹார் தேர்தலில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டு சோதனையில் வித்தியாசம் இல்லை: மாநிலத் தேர்தல் ஆணையம் தகவல்
Updated on
1 min read

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்த தொகுதிகள் வித்தியாசத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்ததால், வாக்குப்பதிவு மீது புகார் எழுந்தது. இவற்றை ஒப்புகைச் சீட்டுகளுடன் பொருத்திப் பார்த்த மாநிலத் தேர்தல் ஆணையம், எந்த வித்தியாசமும் இல்லை என அறிவித்துள்ளது.

பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தலில் 15 தொகுதிகள் மட்டுமே அதிகம் பெற்று தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஏ) ஆட்சி அமைத்துள்ளது. கூட்டணிக்குத் தலைமை வகித்த ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர் ஆனார்.

என்டிஏவின் முக்கியக் கூட்டணிக் கட்சியான பாஜக சார்பில் இரண்டு துணை முதல்வர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு தோல்வியுற்ற மெகா கூட்டணி, வாக்குப் பதிவுகளில் குளறுபடிகள் செய்யப்பட்டதாகப் புகார் எழுப்பியது. இதனால், பிஹார் தேர்தல் ஆணையம் சார்பில் அதன் 243 தொகுதிகளில் குறிப்பிட்ட 1,215 வாக்குச் சாவடிகளின் இயந்திரங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகளின் ஒப்புகைச் சீட்டுகளில் வித்தியாசம் வருகிறதா என ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.

இதில் எந்த வித்தியாசமும் இல்லை எனவும், இதனால் வாக்குப் பதிவில் எந்தக் குளறுபடிகளும் நடைபெறவில்லை என்றும் பிஹார் தேர்தல் ஆணைய அதிகாரி அறிவித்துள்ளார்.

கடந்த 2017 கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து ஒப்புகைச் சீட்டு சோதனைகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in