Last Updated : 03 Dec, 2020 12:18 PM

 

Published : 03 Dec 2020 12:18 PM
Last Updated : 03 Dec 2020 12:18 PM

டெல்லி போராட்டத்துக்குச் சென்ற உ.பி. விவசாயிகள்: வயல்வெளிகளில் களமிறங்கிய வீட்டுப் பெண்கள்

மத்திய அரசின் வேளாண் கொள்கைகளை எதிர்த்து டெல்லியில் தொடரும் போராட்டத்தில் உ.பி. விவசாயிகள் கலந்து கொண்டுள்ளதால், விவசாயப் பணிகளை மேற்கொள்ள அவர்களது வீட்டுப் பெண்கள் வயல்வெளியில் களம் இறங்கியுள்ளனர்.

மத்திய அரசு அறிமுகம் செய்த முக்கிய மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் தொடர்கிறது. இதற்காக, டெல்லியை ஒட்டியுள்ள உ.பி.யின் மேற்குப் பகுதியின் பெரும்பாலான வயல் நிலங்களில் விவசாயம் செய்ய ஆளில்லாத நிலை உள்ளது.

இதன் காரணமாக, அங்கு பயிரிடப்பட்டுள்ள கடுகு, உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளைப் பராமரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க விவசாயிகளின் மகள்கள் மற்றும் மனைவி என அவர்களது வீட்டுப்பெண்கள் வயல்வெளியில் களம் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் மீரட்டின் காஸ்பூர் கிராமத்தின் பட்டதாரியான நிஷா சவுத்ரி கூறும்போது, ''எங்களுக்கு 10 பிகா விளைநிலம் உள்ளது. போராட்டத்திற்கு எனது தந்தையுடன் சகோதரர்களும் சென்றுவிட்டதால் நான், எனது தாய் மற்றும் அத்தையுடன் பயிர்கள் பராமரிப்புப் பணியில் இறங்கியுள்ளேன். இவர்கள் போராட்டத்திலிருந்து திரும்ப ஆறு மாதங்கள் ஆனாலும் அதுவரை சமாளிப்போம்'' எனத் தெரிவித்தார்.

இதே விவகாரத்தில் முசாபர் நகரின் கக்ராலா கிராமத்தின் சுமிதா தேவி கூறும்போது, ''எங்களது முக்கியப் பயிரான கரும்பைப் பராமரிக்கும் நேரத்தில் எனது கணவர் போராட்டத்திற்குச் செல்ல வேண்டியதாயிற்று. எனினும், நானே ஆட்களை வைத்து வயல்வெளிப் பணிகளைத் தொடர்கிறேன். அவர் எப்போது வேண்டுமானாலும் வரட்டும், கவலை இல்லை'' எனத் தெரிவித்தார்.

இதேநிலை, உ.பி.யின் மேற்குப்பகுதி மாவட்டங்களான அலிகர், காஜியாபாத், மதுரா, ஆக்ரா, முசாபர்நகர் மற்றும் சஹரான்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நிலவுகிறது. இங்கும் பல கிராமப்புறப் பகுதிகளில் விவசாயிகளின் வீட்டுப் பெண்கள் வயல்வெளிகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர்.

ஆரம்பத்தில் இருந்தே இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் தந்தை அல்லது கணவருடன் வயல்வெளிக்குச் சென்று உதவுவது வழக்கம். இவர்களில் டிராக்டர்களை ஓட்டும் பெண்களையும் உ.பி. கிராமங்களில் சாதாரணமாகப் பார்க்க முடியும். அப்போது கிடைத்த அனுபவம் பெண்களுக்குத் தற்போது உதவியாக உள்ளது. பல விவசாயிகளின் பிள்ளைகள் அருகிலுள்ள நகரங்களில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கிப் படிப்பவர்கள்.

தற்போது கரோனா பரவலால் அவை மூடப்பட்டு, இணையதளம் வழியாகப் பாடங்கள் கற்பிக்கப்படுவதால், அவர்கள் வீட்டில் உள்ளனர். இந்தச் சூழலும் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்குச் சாதகமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

இதனிடையே, எட்டாவது நாளாகத் தொடரும் விவசாயிகள் போராட்டத்தில், தலைவர்களுடன் இன்று இரண்டாவது முறையாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்டப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x