

கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் கார்பைட் நிறுவனத்திலிருந்து விஷவாயு கசிவு ஏற்பட்ட விபத்தில் உயிர் தப்பி வாழ்ந்து வருபவர்களில் 102 பேர் கரோனாவில் உயிரிழந்துவிட்டதாக மத்தியப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்காகச் செயல்பட்டுவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கரோனாவில் 254 பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் துணை அமைப்பான யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனம் போபாலில் செயல்பட்டு வந்தது. 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் நாள் நள்ளிரவு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியான மெதில் ஐசோ சயனைட் எனப்படும் நச்சு வாயுவில் சிக்கி 25,000 பேர் பலியாகினர், 5.68 லடசம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டனர்.
இந்த போபால் விஷவாயுக் கசிவு நிகழ்வின் 36-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த விஷவாயுக் கசிவில் பலியானவர்கள், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி 4 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போராடி வருகின்றன.
குறிப்பாக போபால் குரூப் ஃபார் இன்பர்மேஷன் அன்ட் ஆக்ஸன், போபால் கேஸ் பீடிட் ஸ்டேஷனரி கர்மச்சாரி, போபால் கேஸ் பீடிட் மகிளா புருஷ் சங்கர்ஸ் மோர்ச்சா, சில்ட்ரன் ஏகைன்ஸ்ட் டோ கெமிக்கல்ஸ் ஆகிய அமைப்புகள் பாதிக்கப்பட்டோருக்கும், உயிரிழந்தோருக்கும் உரிய நிவாரணம் வழங்கக் கோரி கார்பைட் நிறுவனத்திடம் கோரி வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பால் போபால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களில் போபால் விஷவாயுக் கசிவில் தப்பி உயிர் பிழைத்தவர்கள் பலரும் உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியப் பிரதேச அரசின் போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு அமைப்பின் இயக்குநர் பசந்த் குரோ கூறுகையில், “டிசம்பர் 2-ம் தேதிவரை, கரோனா வைரஸ் பாதிப்பால் போபால் மாவட்டத்தில் 518 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 102 பேர் போபால் விஷவாயு சம்பவத்தில் உயிர் தப்பி வாழ்ந்தவர்கள். உயிரிழந்த 102 பேரில 69 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். 33 பேர் 50 வயதுக்குட்பட்டவர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், போபால் குரூப் ஃபார் இன்பர்மேஷன் அன்ட் ஆக்ஸன் அமைப்பின் தலைவர் ரச்சனா திங்ரா கூறுகையில், “போபால் மாவட்டத்தில் 518 பேர் கரோனாவில் உயிரிழந்துவிட்டதாக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் உயிரிழந்த 450 பேர் வீடுகளுக்கு நாங்கள் சென்று நேரடியாக ஆய்வு செய்ததில், 254 பேர் போபால் விஷவாயு சம்பவத்தில் உயிர் தப்பியவர்கள் கரோனாவில் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்தது.
போபால் விஷவாயு கசிவு நினைவு மருத்துவமனை ஆய்வு மையம் இந்த 254 பேருக்கும் வழங்கிய ஸ்மார்ட் கார்டுகளின் நகலையும் நாங்கள் பெற்றுள்ளோம். அவர்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுத் தருவோம்.
போபால் விஷவாயு சம்பவத்தில் உயிர் தப்பியவர்கள் எத்தனைபேர் கரோனாவில் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறித்த தெளிவான தகவல்கள் அரசிடம் இல்லை.
எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, விஷவாயுக் கசிவில் உயிர் பிழைத்தவர்கள் கரோனாவில் உயிரிழந்தது 6.5 சதவீதமாகும். இது இயல்பாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.