Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

குஜராத்தில் படேல் சிலை பார்வையாளர் கட்டணத் தொகையில் ரூ.5 கோடி ஊழல்

அகமதாபாத்

குஜராத்தில் ஒற்றுமையின் சிலைக்கான பார்வையாளர் கட்டணத் தொகையை வங்கியில் செலுத்தாமல் ரூ.5.24 கோடி முறைகேடு செய்ததாக தனியார் வசூல் ஏஜென்சி ஊழியர்கள் சிலருக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டம் கேவடியா பகுதியில் நர்மதை ஆற்றின் குறுக்கே சர்தார் வல்லபபாய் படேலுக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படுகிறது. கடந்த 2018-ல்சிலை திறக்கப்பட்டது முதல் குஜராத்தின் முக்கிய சுற்றுலா தலமாக இது விளங்குகிறது. இங்கு பார்வையாளர்களிடம் இருந்துவசூலிக்கப்படும் கட்டணம், வதோதராவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த டெபாசிட் தொகையை கேவடியா சென்று வசூலித்து வருவதற்காக தனியார் ஏஜென்சி ஒன்றை வங்கி நியமித்திருந்தது.

கடந்த 2018 நவம்பர் முதல் 2020 மார்ச் வரை பார்வையாளர் கட்டண வசூல் தொகைக்கும் வங்கி டெபாசிட் தொகைக்கும் இடையே பெருத்த வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வங்கி நடத்திய விசாரணையில், வசூலித்து வந்த தொகையை வசூல் ஏஜென்சி ஊழியர்கள் வங்கியில் செலுத்தாமல் ரூ.5 கோடியே24 லட்சத்து 77,375 ஊழல் செய்திருப்பது தெரிய வந்தது.

வங்கி அளித்த புகாரின் பேரில் கட்டண வசூல் ஏஜென்சியின் அடையாளம் தெரியாத ஊழியர்கள் சிலர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x