

டெல்லியில் கரோனா வைரஸ் பாதிப்பு விகிதம் அடுத்த சில தினங்களில் 5 சதவீதத்துக்கும் கீழ் குறையும் என சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நம்பிக்கை தெரிவித்தார்.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு கடந்த செப்டம்பர் மாதத்தில் உச்சத்தை தொட்டு தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது. ஆனால் டெல்லி, கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் நாளொன்றுக்கு சராசரியாக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றுக்கு ஆளாகி வந்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு வைரஸ் பரிசோதனை எண்ணிக்கையை மத்திய – மாநில அரசுகள் அதிகப்படுத்தின. அதன்படி, தினமும் 60 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் மற்றும்அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் போர்க்கால அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இதன் விளைவாக, ஒருமாதத்துக்குள்ளாக கரோனாசோதனைக்கு உட்படுத்தப்படு வோரில் உறுதி செய்யப்படுவோர் விகிதம் 15-லிருந்து 7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திரஜெயின் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “டெல்லி அரசு மேற்கொண்டு வரும் அதிரடிதடுப்பு நடவடிக்கையால் கரோனா பாதிப்பு விகிதம் அடுத்த சில தினங்களில் 5 சதவீதத்துக்கும் கீழ் குறையும்” என்றார்.