Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

முகக்கவசம் அணியாதவர்கள் கரோனா சிகிச்சை மையத்தில் கட்டாயம் பணி செய்ய வேண்டும்: குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு

அகமதாபாத்

முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்கள் கரோனா சிகிச்சை மையத்தில் கட்டாயம் பணி செய்ய வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைகட்டுப்படுத்தும் நோக்கில் குஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணிந்துதான் வெளியே வர வேண்டும் என்று மாநில சுகாதாரத் துறை அறிவித்து அதைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால் சுகாதாரத் துறைஉத்தரவையும் மீறி சிலர் பொதுவெளியில் முகக்கவசம் இன்றிநடமாடி வருகின்றனர். இவ்வாறுபொது இடங்களில் முகக்கவசம் இன்றி அதிகம் பேர் நடமாடுவதை சுட்டிக்காட்டி குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளன.

இதுதொடர்பாக தலைமை நீதிபதி விக்ரம்நாத். நீதிபதி பர்திவாலா ஆகியோர் அடங்கியஅமர்வு தாமாக முன்வந்து கடந்த வாரம் விசாரணை நடத்தியது.

அப்போது எச்சரிக்கை மற்றும் அபராதம் ஆகியவற்றுக்கு செவிசாய்க்காமல், தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு கரோனா சிகிச்சை மையத்தில் பணி செய்யுமாறு தண்டனை வழங்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசின் சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் கமல் திரிவேதி, "உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது சிரமம். இதுதொடர்பாக பரிசீலிக்க ஒரு வாரம் அவகாசம் தேவை" என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால் இதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். முகக்கவசம் அணியாமல் வெளியே திரியும் நபர்களைக் கட்டுப்படுத்த இதுபோன்ற தண்டனை விதிப்பது சரியே என்று அவர்கள் தெரிவித்தனர்.

அதன்படி முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்று பவர்கள் ரூ.1,000 அபராதம்செலுத்துவதுடன் கரோனா சிகிச்சை மையத்தில், 5 முதல்14 நாட்கள் வரை பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பணியானது தினசரி குறைந்தபட்சம் 4 மணி முதல் 6 மணி நேரங்கள் வரை நடைபெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பணிகளில் மருத்துவம் தொடர்புஇல்லாமல் இடத்தை சுத்தப்படுத்துதல், பாத்திரங்களை தூய்மை செய்தல், சமையல் செய்வதில் உதவுதல், உணவு பரிமாறுதல், தகவல் சேகரிப்பு போன்றவையாக அமையலாம் என்றும் நீதிபதிகள்தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x