Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

முன்கூட்டியே விடுவிக்கக் கோரும் சசிகலாவின் மனுவை பரிசீலிக்கும் சிறைத் துறை

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மூவரின் 4 ஆண்டு சிறை தண்டனை வரும் பிப்ரவரி 14-ம்தேதியுடன் நிறைவடைகிறது. எனினும் வரும் ஜனவரி 27-ம்தேதி சசிகலா விடுதலை ஆகவாய்ப்பு இருப்பதாக சிறை நிர்வாகம் தெரிவித்தது. இதனிடையே, சசிகலா சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் மனு ஒன்றை அளித்தார்.

அதில் சசிகலா, ‘‘கடந்த45 மாதங்களாக‌ நான் சிறையில் இருந்துள்ளதால் சிறைத்துறை விதிமுறையின்படி 120 நாட்கள் என்னை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியும். சிறையில் எவ்வித விதிமீறலிலும் நான் ஈடுபடவில்லை. எனவேநன்னடத்தை விதியின் கீழ்என்னை முன்கூட்டியே விடுதலைசெய்ய வேண்டும்'' என கோரியுள்ளார்.

இந்த மனுவை சிறைத் துறை உயர் அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ‘‘சிறைத் துறைவிதிமுறையின்படி ஒரு கைதிக்குமாதத்துக்கு 3 நாட்கள் தண்டனைகுறைப்பு சலுகை வழங்க முடியும். அதனை சிறை அதிகாரிகள் கைதியின் நன்னடத்தை, சாதனை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வழங்குவார்கள்.

அதன்படி சசிகலா 120-க்கும்மேற்பட்ட நாட்களை சலுகையாக கோரி, முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளார். ஆனால் சசிகலா மீதுசிறையில் சொகுசாக இருந்தது,வெளியே சென்றது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட புகார்கள் இருக்கின்றன.

அதை விசாரித்த வினய்குமார் ஆணையம், சசிகலா மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்துள்ளது. எனவே சசிகலாவுக்கு சலுகை வழங்கும் விவகாரத்தை சிறைத் துறை மேலிடம்மிக கவனமாக பரிசீலித்து வருகிறது'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x