Published : 02 Dec 2020 10:01 PM
Last Updated : 02 Dec 2020 10:01 PM

புரெவி புயல் இரவு இலங்கையில் கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

புரெவி புயல் சின்னம் இன்று இரவு திரிகோணமலைக்கு வடக்கே இலங்கை கடலோரப் பகுதியைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் `புரெவி' புயல் சின்னம் கடந்த ஆறு மணி நேரத்தில், மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு - வடமேற்காக நகர்ந்து சென்று இன்றைக்கு - டிசம்பர் 2 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வங்காள விரிகுடாவின் தென்மேற்கில் மையம் கொண்டிருந்தது.

இலங்கையில் திரிகோணமலைக்கு கிழக்கு - தென் கிழக்கில் 240 கிலோ மீட்டர் தொலைவிலும், இந்தியாவில் பாம்பனுக்கு கிழக்கு - தென் கிழக்காக 470 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு 650 கிழக்கு - வடகிழக்காக 650 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டிருந்தது.

அடுத்த 12 மணி நேரத்தில் இது மேலும் தீவிரம் அடைந்தது. இது மேற்கு - வடமேற்காக நகர்ந்து புயலாக மாறியது. திரிகோணமலைக்கு வடக்கே இலங்கை கடலோரத்தில் இன்று இரவில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் சின்னம் மேற்கு - வடமேற்காக நகர்ந்து டிசம்பர் 3 ஆம் தேதி காலையில் கோமோரின் பகுதியை ஒட்டி மன்னார் வளைகுடா மற்றும் குமரிமுனை பகுதிக்குச் செல்லும் என எதிர்பார்க்கப் படுகிறது.

டிசம்பர் 3-ம் தேதி மதியம் பாம்பனுக்கு மிக அருகாமையில் மணிக்கு 70- 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். பிறகு அது மேற்கு - தென்மேற்காக நகர்ந்து, தமிழக தென் கடலோரத்தில் கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கும் இடையில் டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலையில் புயலாகக் கடக்கும்.

அப்போது மணிக்கு 70- 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

தென் தமிழகத்தில் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில்) சில இடங்களில் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் கனமானது முதல் மிக கனமானது வரையிலும், சில இடங்களில் மழை பெய்யக் கூடும்; டிசம்பர் 3 ஆம் தேதி தெற்கு கேரளாவில் (திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா பகுதிகளில்) இதே அளவு மழை பெய்யக் கூடும்.

தென் தமிழகத்தில் 2 மற்றும் 4 ஆம் தேதிகளிலும், தென் கேரளாவில் 3 மற்றும் 4 தேதிகளிலும் கனமானது முதல் மிக கனமானது வரையில் ஆங்காங்கே மழை பெய்யக் கூடும்.

வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, மாஹே & காரைக்கால், வடக்கு கேரளாவில் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் கனமானது முதல் மிக கனமானது வரையில் ஆங்காங்கே மழை பெய்யலாம். டிசம்பர் 4 ஆம் தேதி ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திராவில் ஆங்காங்கே கனமழை பெய்யலாம். 3 மற்றும் 4 தேதிகளில் லட்சத்தீவு பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும்.


இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x