Last Updated : 02 Dec, 2020 12:00 PM

 

Published : 02 Dec 2020 12:00 PM
Last Updated : 02 Dec 2020 12:00 PM

இந்தியாவை இந்து தேசமாக அறிவியுங்கள்; இல்லையேல் என் உயிரை மாய்த்துக்கொள்ள அனுமதியுங்கள்: குடியரசு தலைவருக்கு அயோத்தி சாது கடிதம்

புதுடெல்லி

இந்தியாவை இந்து தேசமாக அறிவியுங்கள் என வலியுறுத்தி அயோத்தி மடத்தின் சாது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்குக் கடிதம் எழுதியுள்ளார். இதை செய்யாவிட்டால் தன் உயிரை மாய்த்துக்கொள்ள அனுமதிக்கும்படியும் அக்கடிதத்தில் அவர் வேண்டியுள்ளார்.

அயோத்தியின் தபஸ்வீ மடத்தின் சாதுவாக இருப்பவர் மஹந்த பரமஹன்ஸ் தாஸ். இவர் நேற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

இதன் நகலை, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.

தனது கடிதத்தில் சாது மஹந்த் பரமஹன்ஸ் தாஸ் கூறியிருப்பதாவது: இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் நம் நாடு பிரிந்த பின்பும் இங்கு முஸ்லிம்கள் வாழ்வது தொடர்கிறது.

இதில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும். நாட்டில் வாழும் அனைத்து சமூகத்தினர்களுக்காகவும் பொது சிவில் சட்டம் அமலாக்கப்பட வேண்டும்.

பசுக்களை தேசப் பாரம்பரியச் சின்னமாக்கி ராமச்சந்திர மானஸ் நூலை தேசிய நூலாக்கப்பட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட எனது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை எனில், எனது உயிரை மாய்த்துக்கொள்ள எனக்கு அனுமதி அளிக்க வேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல், அயோத்தியின் சாதுவான மஹந்த் பரமஹன்ஸ் கோரிக்கை வைப்பது முதன்முறையல்ல. இதற்கு முன் அவர் கடந்த அக்டோபரில் இதேபோன்ற கோரிகைகளை முன்னிறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் துவங்கினார்.

அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போராட்டத்தைக் கைவிட வேண்டினார். இதனால் அவர் தனது உண்ணாவிரத்தை முடிப்பதாக அறிவித்தார்.

இதேபோல், இரண்டு வருடங்களுக்கு முன் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் எனக் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் முதன்முறையாக நடத்தினார்.

அயோத்தியின் ராம் ஜனகி கோயில் வளாகத்தில் உண்ணாவிரதம் நடத்திய நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டதன் பேரில் விரதத்தை முடித்துக் கொண்டார்.

இப்போது மீண்டும் அதே கோரிக்கைகளுடன் குடியரசு தலைவருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x