

இந்தியாவில் கரோனா பாதிப்பு 95 லட்சத்தை நெருங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் 43,062 குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். அதேவேளையில் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 501 பேர் கரோனாவுக்கு பலியாகினர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இன்றுவரை உலகையே உலுக்கிவருகிறது.
கரோனாவிலிருந்து உலகைக் காப்பாற்ற பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்து பலகட்ட சோதனைகளைச் செய்துவருகின்றன..
இந்தியாவும் கரோனாவை எதிர்கொள்ள பலகட்ட ஊரடங்குகளையும் கடந்து தற்போது தடுப்பூசியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் காத்திருக்கிறது.
இந்நிலையில், நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு 95 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை மொத்தம் 94,99,414 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 43,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை 89,32,647 பேர் கரோனாவிலிருந்து விடுபட்டுள்ளனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 1,38,122 என்றளவில் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் 501 பேர் கரோனாவுக்கு பலியானது கவலையளிக்கும் புள்ளிவிவரமாக உள்ளது.
கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், அடிக்கடி கைகளை சோப்பால் கழுவுதல் ஆகியவற்றை மக்கள் சிறு சுணக்கமும் காட்டாமல் பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்திவருகிறது.
சன்னி தியோலுக்கு கரோனா:
பாஜக எம்.பி. சன்னி தியோலுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகரும் எம்பியுமான சன்னி தியோல் இமாச்சலப் பிரதேசத்தில் தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.