Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

அந்தமான் நிகோபார் தீவுகள் பகுதியில் எதிரி கப்பல்களை அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை

எதிரி நாட்டு கப்பல்களை தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.

இந்திய கடற்படை சார்பில் பிரம்மோஸ் ரக ஏவுகணைகள் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக எதிரி நாட்டு கப்பல்களைத் தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை நேற்று பரிசோதிக்கப்பட்டது.

அந்தமான் நிகோபார் தீவுகள் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ரன்விஜய் போர்க் கப்பலில் இருந்து நேற்று காலை 9.25 மணிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டது. வங்காள விரிகுடாவில் கார் நிகோபார் தீவுகள் அருகே நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு அருகில் உள்ள இலக்கை இது வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால் (டிஆர்டிஓ) உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை, 300 கி.மீ. வரை சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. இந்திய கடற்படை இதற்கு முன் கடந்த நவம்பர் 24-ம் தேதி நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க வல்ல பிரம்மோஸ் ஏவுகணையை அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து செலுத்தியது. இந்த ஏவுகணை மற்றொரு தீவில் உள்ள இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

கிழக்கு லடாக்கில் இந்திய – சீன எல்லையில் கடந்த ஜூன் மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்களின் மோதலைத் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மேலும் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் பிரம்மோஸ் ரக ஏவுகணைகளை இந்தியா தொடர்ந்து செலுத்தி பரிசோதித்து வருகிறது.

ரஷ்யாவின் என்பி மாஷினோஸ்ட்ரோயினியா நிறுவனத்துடன் இணைந்து டிஆர்டிஓ உருவாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை, உலகின் மிக விரைவான சூப்பர்சோனிக் தாக்குதல் ஏவுகணையாகும்.

இந்த ஏவுகணைகளை நீர்மூழ்கிகள், கப்பல்கள், விமானம் மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும். பிரம்மோஸ் ரக ஏவுகணைகளை தொடர்ந்து, ஹைப்பர்சோனிக் ரகத்தை சேர்ந்த பிரம்மோஸ் -2 ஏவுகணை தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

இந்தியாவின் பிரம்மபுத்ரா, ரஷ்யாவின் மோஸ்க்வா நதிகளின் பெயரில் இருந்து பிரம்மோஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x