Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

வேலைதான் போனது, மன உறுதியை இழக்கவில்லை: சாலையோரம் பிரியாணி கடை வைத்த நட்சத்திர ஓட்டல் தலைமை சமையல்காரர்

சாலையோரம் பிரியாணி கடை வைத்து நடத்தி வரும் அக் ஷய் பார்க்கர்.

மும்பை

கரோனா ஊரடங்கில் வேலையை இழந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் தலைமை சமையல்காரர், மன உறுதியை விட்டு விடாமல் சாலையோரத்தில் பிரியாணி கடையை தொடங்கி தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்தவர் அக் ஷய் பார்க்கர். அங்குள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தலைமை சமையல்காரராக பணிபுரிந்து வந்தார். மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்தார்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக அவர் பணிபுரிந்து வந்த நட்சத்திர ஓட்டல் கடும் நஷ்டத்தை சந்தித்தது. எந்த வருமானமும் இல்லாமல், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் நிலைக்கு ஓட்டல் நிர்வாகம் தள்ளப்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் நஷ்டத்தை தாக்கு பிடிக்க முடியாமல், தங்களிடம் பணிபுரியும் பல ஊழியர்களை கடந்த மே மாதம் வேலையில் இருந்து ஓட்டல் நிர்வாகம் நிறுத்தியது.

இவ்வாறு வேலை இழந்தவர்களில் அக் ஷய் பார்க்கரும் ஒருவர். வேலை பறிபோன அதிர்ச்சி ஒருபுறம்; இனி குடும்பத்தை எப்படி நடத்த போகிறோம் என்ற கவலை ஒருபுறம் என அக் ஷய் பார்க்கர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். நட்சத்திர ஓட்டல் முதல் சாதாரண ஓட்டல் வரை அனைத்து இடங்களிலும் வேலைக்கு விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அந்த நேரத்தில்தான், அக் ஷய் பார்க்கருக்கு யோசனை ஒன்று தோன்றியது. சமையல் எனும் கைத்தொழில் நம்மிடம் இருக்கும் போது, நாம் ஏன் மற்றவர்களிடத்தில் வேலை கேட்டு அலைய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற துணிச்சலுடன், தன்னிடம் இருந்த மிக சொற்ப அளவிலான பணத்துடன் அடுத்த சில தினங்களிலேயே மும்பையின் தாதர் பகுதியில் ஒரு சிறிய பிரியாணி கடையை அக் ஷய் தொடங்கினார். கடைக்கு ‘அக் ஷய் பார்க்கர் ஹவுஸ்’ என்றும் பெயர் சூட்டினார்.

ஆரம்பத்தில் மிகச் சாதாரணமாகவே வியாபாரம் நடந்தது. நாட்கள் செல்ல செல்ல, இது நட்சத்திர ஓட்டல் தரத்திலான பிரியாணி என்பதை மக்கள் தெரிந்து கொண்டனர். அதன் பிறகு, வாடிக்கையாளர்களின் கூட்டம் அக் ஷர் பார்க்கரின் கடையில் நிரம்பி வழிய தொடங்கியது. வெளிநாட்டு கார்களில் கூட வாடிக்கையாளர்கள் அங்கு வருவதை பார்க்க முடிகிறது. இதனால், தற்போது நாளொன்றுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பாதிப்பதாக கூறுகிறார் அக் ஷய் பார்க்கர்.

அக் ஷய் பார்க்கரின் இந்த வெற்றி கதை, பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x