

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக்கின் 551-வது பிறந்த நாள் கனடாவில் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். மேலும், விவசாயிகளின் வலிகளை உணர்ந்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு இந்தியாவிடம் வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கனடா பிரதமரின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், சிவசேனா கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஜஸ்டின் ட்ரூடோ அவர்களே, இந்திய விவசாயிகள் குறித்து நீங்கள் கவலைப்படுவது உண்மையில் இதயத்தை தொடுகிறது. அதே சமயத்தில், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.
மூன்றாவது நாடுகள் நம் நாட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க தொடங்கும் முன்பாகவே, விவசாயிகள் போராட்டத்தை பிரதமர் மோடி உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு தனது பதிவில் பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.