

பிஹார் சட்டப்பேரவைக்கு இதுவரை நடந்த இரண்டு கட்ட தேர்தலில் நித்திஷ்குமாரின் மகா கூட்டணிக்கு 65 மற்றும் பாஜக கூட்டணிக்கு 60 தொகுதிகள் கிடைக்கும் என அதன் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இங்கு மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் இதுவரை 81 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது.
பிஹாரில், கடந்த அக்டோபர் 12 முதல் ஐந்து கட்டங்களாக துவங்கி நடைபெற்று வரும் தேர்தலின் முடிவுகள் ஓரளவிற்கு கூட கணிக்கப்படாத நிலையில் உள்ளது. வழக்கமாக தன் கணிப்புகளை வெளியிடும் தொலைக்காட்சிகளும் அதை, இந்தமுறை செய்ய முடியாமல் திணறி வருவதாகக் கருதப்படுகிறது.
இதனால், சில பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாகவும், வேறு சில நித்திஷ்குமாரின் மஹா கூட்டணிக்கு அதிக தொகுதிகள் என்றும் தெளிவில்லாத நிலையில் கூறி வருகின்றன. இந்நிலையில், அங்கு நடந்த முடிந்துள்ள இரண்டு கட்ட தேர்தலுக்கு பின் அக்கட்சிகளின் தலைவர்களே தம் கணிப்பை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து பாஜகவின் பிஹார் மாநிலத் தலைவரான மங்கள் பாண்டே, ’எங்களுக்கு 60 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். இந்த எண்ணிக்கை, மூன்றாம் கட்ட தேர்தலுக்கு பின் நூறை தாண்டும். இதனால், ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் வெறுப்பின் எல்லைக்கு சென்றுள்ளனர்.’ எனக் கூறியுள்ளார்.
ஆனால், நித்திஷின் கூட்டணிக்கு மொத்தம் முடிந்த 81 தொகுதிகளில் 65 தொகுதிகள் வெற்றி பெறும் என அவரது கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அங்கு ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் பிஹார் மாநில அமைச்சரான விஜய்குமார் சௌத்ரி கூறுகையில், ‘இதுவரை முடிந்த தேர்தல்களின் நிலவரப்படி தேஜமு மிகவும் பின்தங்கி உள்ளதை காட்டுகிறது. இதனால், பிரதமரின் முகமும் மேடைகளில் வெளுத்து காணப்படுகிறது. எனவே, அவர்கள் தம் நிலையை காத்து கொள்ள வேறு வழிகளில் இறங்கியுள்ளனர்.’ எனக் கூறுகிறார்.
எனினும், அக் கூட்டணிக் கட்சிகளில் உலவும் ரகசிய அறிக்கைகளின்படி கிடைக்கும் எண்ணிக்கை வேறாக உள்ளது. பாஜகவினருக்கு கிடைத்துள்ள ரகசிய தகவலின்படி அதற்கு, 81-ல் 56 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல்கட்ட முடிந்த 49-ல் 24-தொகுதிகளும், இரண்டாம் கட்டத்தின் 32-ல் 28 தொகுதிகளும் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரவிருக்கும் மூன்று மற்றும் நான்காம் கட்டத்தின் முறையே 50 மற்றும் 55 தொகுதிகளில் கணிசமான எண்ணிக்கை பெற்று இறுதியில் நடைபெறும் ஐந்தாம் கட்டத்தின் 57-ல் தனி மெஜாரிட்டி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பிஹாரின் ஐந்தாம் கட்ட தேர்தலில் பெரும்பாலான தொகுதிகள் நேபாள எல்லைகளில் அமைந்துள்ள சீமாஞ்சல் பகுதியில் வருகின்றன. இங்கு முஸ்லிம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் அங்கு கூட்டணிகள் பெறும் வெற்றி தொகுதிகள் கணிக்க முடியாமல் உள்ளது. ஏனெனில், அங்குள்ள முஸ்லிம் வாக்குகளை பெற ஐதராபாத்தின் முஸ்லிம் கட்சியான மஜ்லீஸ்-ஏ-இத்தாதுல் முஸ்லிமின் முதன் முறையாக ஆறு தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறுகையில், ‘இந்தமுறை பிஹார் தேர்தல் மிகவும் கடினமாக உள்ளது. இதன் காரணமாக நாம் எங்கள் கூட்டணி உறுப்பினர்களின் பலத்தை நம்பாமல் நமது சொந்த செல்வாக்கின் வாக்குகளை பெறுவதில் முனைந்துள்ளோம். இருகட்ட தேர்தலில் எங்கள் எண்ணிக்கை குறைவதாகக் கருதப்பட்டு பிரதமர் தன் பிரச்சாரக் கூட்டங்களை குறைத்ததாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. தன் நவராத்ரி விரதம் காரணமாக வெளியில் செல்வதை ஒத்தி வைத்துள்ள பிரதமர், இன்னும் 13 பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளவிருக்கிறார்.’ எனக் கூறுகின்றனர்.
லாலுவின் சமுதாயமான யாதவர்கள் வாக்குகளையும் குறி வைத்து இந்தமுறை அவர்களில் 22 வேட்பாளர்களை பாஜக போட்டியிட வைத்துள்ளது.