வேளாண் சட்டத்தில் உள்ள சிக்கலுக்குரிய அம்சங்களை நாளைக்குள் தெரிவியுங்கள்: விவசாய அமைப்புகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சிக்கலான அம்சங்கள், பிரச்சினைகளை மட்டும் அடையாளம் கண்டு நாளைக்குள் தெரிவியுங்கள். இது தொடர்பாக 3-ம் தேதி நடக்கும் 2-வது கட்டப் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்படும் என்று விவசாய சங்கங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் கடந்த இரு மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டெல்லி சலோ எனும் டெல்லியை நோக்கி போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிர், கரோனா பரவல் எதையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையடுத்து, விவசாயிகளுடன் வரும் 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்பு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், சூழல் கருதி இன்று பிற்பகலில் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சங்கத்துக்கு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்தார்.
இதன்படி டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று பிற்பகலில் நடந்த பேச்சுவார்த்தையில் 35 விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகத்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏறக்குறைய 3 மணி நேரம் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நீண்ட பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தப் பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட விவரம் குறித்து மத்திய வேளாண்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''விஞ்ஞான் பவனில் 35 விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையில், விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகளிடம் வேளாண் சட்டத்தின் சிறப்பு அம்சங்கள், நன்மைகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
வேளாண் சட்டத்தில் உள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்து நீண்ட ஆலோசனை மிகவும் சுமுகமாக நடந்தது. நாட்டின் வேளாண் முன்னேற்றம், விவசாயிகள் நலனுக்கு அதிகபட்ச முன்னுரிமை அளிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வலியுறுத்தினார்.
இந்த விரிவான விவாதத்தின்போது, விவசாயிகளின் பிரச்சினைகளை, கோரிக்கைகளை பரஸ்பரத்துடன் பரிசீலிக்க வல்லுநர்கள் குழுவை அமைக்க வேளாண் அமைச்சர் முன்மொழிந்தார். ஆனால், மத்திய அரசுடன் இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும் வகையில் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கு வருவதாக, வேளாண் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
வேளாண் சீர்திருத்தச் சட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சிக்கல்கள், சிக்கலுக்குரிய அம்சங்களை அடையாளம் கண்டு டிசம்பர் 2-ம் தேதிக்குள் மத்திய அரசிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த அம்சங்கள் 3-ம் தேதி நடக்கும் 2-வது கட்டப் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகளின் நலன் காக்கப்படும். விவசாயிகளின் நலனுக்கான எந்தவிதமான வெளிப்படையான ஆலோசனையையும் நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது என விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் உறுதியளிக்கப்பட்டது''.
இவ்வாறு மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
