பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் சிவசேனா கட்சியில் இணைந்தார்

உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில்  நடிகை ஊர்மிளா இன்று இணைந்தார்: படம் | ஏஎன்ஐ.
உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் நடிகை ஊர்மிளா இன்று இணைந்தார்: படம் | ஏஎன்ஐ.
Updated on
1 min read

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர், முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் இன்று இணைந்தார்.

கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகை ஊர்மிளா போட்டியிட்டார். ஆனால், பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டியிடம் ஊர்மிளா தோல்வி அடைந்தார். அடுத்த சில மாதங்களில் காங்கிரஸ் கட்சியிலிருந்தே ஊர்மிளா விலகினார்.

அதன்பின் அரசியலில் எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்காமல் ஊர்மிளா ஒதுங்கியே இருந்து வந்தார். சமீபத்தில் மும்பை நகரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று கங்கணா கூறியதற்குக் கடும் கண்டனத்தை ஊர்மிளா பதிவு செய்தார்.

அப்போது ஊர்மிளா பதிவிட்ட கருத்தில், “மும்பை நகரை அவதூறாகப் பேசுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. நடிகை கங்கணாவுக்கு ஏன் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வரிசெலுத்துவோரின் பணம் ஏன் வீணடிக்கப்பட வேண்டும்” எனக் கண்டித்தார்.

இதனால் நடிகை ஊர்மிளாவை மோசமான வார்த்தைகளால் கங்கணா விமர்சித்தார். பிறகு மன்னிப்பு கோரினார்.

இதற்கிடையே சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் நேற்று அளித்த பேட்டியில், “நடிகை ஊர்மிளா சிவசேனா கட்சியில் நாளை இணைய உள்ளார். அவருக்குக் கட்சியில் உரிய அங்கீகாரம் வழங்கப்படும். சிவசேனா கட்சியில் ஊர்மிளா இணைவது மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே மகாராஷ்டிர கவுன்சில் தேர்தலில் 12 வேட்பாளர்களில் சிவசேனா வேட்பாளராக ஊர்மிளா பெயரும் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்தப் பட்டியல் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிடம் கிடப்பில் உள்ள நிலையில், இன்று சிவசேனா கட்சியில் ஊர்மிளா சேர்ந்துள்ளார்.

மும்பையில் சிவேசனா அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கட்சித் தலைவரும், முதல்வருமான உத்தவ் தாக்கரே முன்னிலையில் நடிகை ஊர்மிளா சிவசேனா கட்சியில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே மனைவி ரேஷ்மி தாக்கரேவும் பங்கேற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in