டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் ராஜ்நாத் சிங் இன்று பேச்சுவார்த்தை: சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு யோசனை

டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் ராஜ்நாத் சிங் இன்று பேச்சுவார்த்தை: சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு யோசனை
Updated on
1 min read

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான மத்திய அரசு குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த சட்டங்களில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ என்ற நடை முறையை இந்த சட்டங்கள் நிர்மூலமாக்கி விடும் எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்த போதிலும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2 மாதங்களாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தச் சூழலில், பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங் களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், தலைநகர் டெல்லிக்குள் கடந்த 27-ம் தேதி நுழைந்தனர். போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் அவர்களை கலைக்க முயன் றனர். ஆனால், அதிக எண்ணிக் கையில் விவசாயிகள் இருந்ததால் போலீஸாரின் முயற்சி பலனளிக்கவில்லை.

தாங்கள் போராட்டம் நடத்த ஜந்தர் மந்தர் மற்றும் ராம்லீலா மைதானங்களை ஒதுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், மத்திய அரசு இதனை ஏற்கவில்லை. இதனால், சுமார் 4000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்போது டெல்லியின் புறநகர் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

6-வது நாளாக இன்றும் இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதன் காரணமாக, டெல்லியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. விவசாயிகள் புராரி பகுதியில் போராட்டம் நடத்த முன்வந்தால், முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உள்துறை அமித் ஷா இரு தினங்களுக்கு முன்பு கூறியிருந் தார். ஆனால், அவரது யோசனையை விவசாய அமைப்புகள் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டன.

மேலும், தங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அதிகாரம் படைத்த அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு நியமிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தன. டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கு மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான மத்திய அரசு குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில விவசாயிகளுக்கு சிறப்பு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு தரப்பில் யோசனை தெரிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in