Last Updated : 01 Dec, 2020 11:27 AM

 

Published : 01 Dec 2020 11:27 AM
Last Updated : 01 Dec 2020 11:27 AM

கடுங்குளிரோடு கடும் வேதனையில் போராடும் விவசாயிகள் கோரிக்கை; மத்திய அரசு ஏன் செவிசாய்க்கவில்லை: பஞ்சாப் முதல்வர் கேள்வி

கடுங்குளிரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு ஏன் செவிசாய்க்கவில்லை என்று பஞ்சாப் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் நேற்று முன்தினம் தெரிவித்தபடி புராரி மைதானத்திற்கு சென்றால் மட்டுமே பேச்சுவார்த்தை என்பதை விவசாயிகள் ஏற்கவில்லை.

கடந்த நவம்பர் 27-ல் தொடங்கிய டெல்லி சலோ போராட்டத்தின் 6-வது நாளான இன்று விவசாயிகள், தாங்கள் போராட்டம் நடத்த ஜந்தர் மந்தர் மற்றும் ராம்லீலா மைதானங்களை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், மத்திய அரசு இதனை ஏற்கவில்லை. இதனால், சுமார் 4000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்போது டெல்லியின் புறநகர் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் மத்திய அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வேளாண் சட்டங்களுக்கு எதிரான எங்கள் போராட்டத்திற்கு ஏன் செவிசாய்க்கவில்லை, இந்த விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. கறுப்புச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகளுடன் எனது அரசாங்கம் உறுதியாக நிற்கும்.

பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் போராட்டத்தில் இணைகிறார்கள் என்றால், அவர்கள் உண்மையிலேயே எவ்வளவு வருத்தப்பட்டிருக்க வேண்டும்.

பிரதமர் மோடி புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறார். விவசாயிகள் தங்களுக்கு இந்த சட்டங்கள் எவ்வளவு பாதகமானது என்று சொல்லியும் கூட ஏன் அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். எனவேதான் பஞ்சாப் மாநில அரசு மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தனது சொந்த மசோதாக்களை நிறைவேற்றியது.

விவசாயிகளின் விளைபொருட்களை கொள்முதல் செய்யும் பஞ்சாப்பில் உள்ள ஆர்தியா (வியாபாரிகள்) அமைப்பு பஞ்சாபின் வெற்றிகரமான விவசாய மாதிரியின் முதுகெலும்பாகும். இதன்மூலம் விவசாயிகளும் வியாபாரிகளும் மிக நெருக்கமான பிணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அப்படியிருக்க ஏற்கெனவே சிறப்பாக உள்ள இந்த முறையை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

கடுங்குளிர் காலத்தில் கோவிட் 19 அச்சுறுத்தல் மத்தியில் ஹரியாணா காவல்துறையின் மிருகத்தனமான தாக்குதலுக்கு இடையில் இந்த சட்டங்களுக்கு எதிராகவே விவசாயிகள் கடும் வேதனையோடு தற்போது டெல்லி எல்லைகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாபின் விவசாய சமூகத்தின் பெரும்பகுதியைக் கொண்ட சிறு விவசாயிகளுக்கு குரு சாஹிப் பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளார், அவர்களில் 75 சதவீதம் பேர் ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலங்களை வைத்திருப்பவர்கள். இந்த எளிய மக்கள்தான் மிகவும் எளிய முறையில் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

இவ்வாறு பஞ்சாப் முதல்வர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x