எப்போதெல்லாம் தேச நலனில் மாற்றங்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தேவையற்ற எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன: பிரதமர் மோடி வேதனை

எப்போதெல்லாம் தேச நலனில் மாற்றங்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தேவையற்ற எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன: பிரதமர் மோடி வேதனை
Updated on
2 min read

எப்போதெல்லாம் சமூகத்திலும் தேசிய நலனிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றனவோ அப்போதெல்லாம் தேவையற்ற எதிர்ப்புக் குரல்கள் எழுவதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி வாரணாசியில் நடைபெற்ற தேவ் தீபாவளி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் காசியிலிருந்து களவுபோன தேவி அன்னபூரணி சிலை மீண்டும் கிடைக்கப் பெறவிருப்பதால் காசிக்கு இது மற்றொரு சிறப்புத் தருணம் என்று கூறினார். காசிக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற பழங்கால சிலைகள் நமது விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் நம்பிக்கைச் சின்னங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் முன்னரே எடுக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற பல்வேறு சிலைகளை நாடு திரும்பப் பெற்றிருக்கும் என்று பிரதமர் கூறினார்.

மரபு என்பது நமக்கு நாட்டின் பாரம்பரியத்தைக் குறிக்கிறது, எனினும் சிலருக்கு அவர்களது குடும்பம் மற்றும் குடும்பப் பெயரை அது உணர்த்துகிறது என்று அவர் கூறினார். பாரம்பரியம் என்பது நமது கலாச்சாரத்தையும் நம்பிக்கையும் மாண்புகளையும் குறிக்கின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டார். பிறருக்கு அது அவர்களது சிலைகள் மற்றும் குடும்பப் புகைப்படங்களைக் குறிக்கலாம்.

குரு நானக் தேவ் சமூகத்தின் மிகப்பெரிய சீர்திருத்தச் சின்னமாக பிரதமர் குறிப்பிட்டார். எப்போதெல்லாம் சமூகத்திலும் தேசிய நலனிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றனவோ அப்போதெல்லாம் தேவையற்ற எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. எனினும் சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் தெளிவடையும் போது அனைத்தும் சரி செய்யப்படுகின்றன. குருநானக் தேவ் அவர்களின் வாழ்க்கை இதனை நமக்குக் கற்றுத் தருவதாக அவர் கூறினார்.

காசியில் வளர்ச்சிப் பணிகள் துவங்கிய போது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமே என்பதற்காக அதனை எதிர்த்தார்கள் என்று பிரதமர் கூறினார்.

பாபாவின் தர்பார் வரையில் விஸ்வநாத் தடம் அமைக்கப்படும் என்று காசி முடிவு செய்தபோது எதிர்ப்பாளர்கள் அதையும் விமர்சித்தார்கள், எனினும் இன்று காசியின் மகிமை பாபாவின் அருளால் மீண்டும் பெறப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாபாவின் தர்பார் மற்றும் தேவி கங்கா வரையில் இருந்த நேரடி இணைப்பு மீண்டும் புனரமைக்கப் படுகின்றது என்று அவர் தெரிவித்தார்.

காசி விஸ்வநாதரின் அருளால் விளக்குப் பண்டிகையில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்ததற்கு பிரதமர் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த பழங்கால நகரின் மகிமையை நினைவுகூர்ந்த அவர், பல ஆண்டுகளாக உலகிற்கு வழிகாட்டியாக காசி திகழ்கிறது என்று கூறினார். தமது தொகுதியான காசி நகருக்கு கரோனா கட்டுப்பாடுகளினால் தம்மால் அடிக்கடி வர இயலவில்லை இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை உணர்ந்து இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

தமது மக்களிடமிருந்து இந்த காலத்தில் தாம் மிகத் தொலைவில் இருக்கவில்லை என்றும் பெருந்தொற்று காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வழிமுறைகள் குறித்து தாம் கேட்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பெருந்தொற்றின்போது பொது சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட காசி மக்களுக்குத் தமது பாராட்டுகளை அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in