

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தம் மேற்கு நோக்கி நகர்ந்து குமரி முனையை டிசம்பர் 3ம் தேதி அன்று நெருங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக தென்தமிழகம் மற்றும் கேரளாவில் தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்தம், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்தமாக உருவாகி இன்று காலை 5.30 மணியளவில், இலங்கை திரிகோணமலைக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் 750 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் 1150 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதை செயற்கைகோள் படங்கள் காட்டுகின்றன.
இது அடுத்த 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறி புயலாக மாறவும் வாய்ப்புள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை டிசம்பர் 2ம் தேதி கடக்கும் என தெரிகிறது. அதன்பின்பு மேற்கு நோக்கி நகர்ந்து குமரி முனையை டிசம்பர் 3ம் தேதி அன்று நெருங்க வாய்ப்புள்ளது.
மழை பொழிவு:
இதன் காரணமாக தென் தமிழகம், தெற்கு கேரளா ஆகிய பகுதிகளில் டிசம்பர் 2ம் தேதி தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளது. இப்பகுதியில் டிசம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி, மாஹே மற்றும் காரைக்கால் மற்றும் வடக்கு கேரளாவின் ஒரு சில பகுதிகளில் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் கனமழை முதல் தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் டிசம்பர் 1ம் தேதி 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஆந்திர கடலோர பகுதியில் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளிலும், லட்சத்தீவு பகுதியில் டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளிலும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: காற்று பலமாக வீசும் என்பதால் தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டியுள்ள கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும். அதனால் தென்கிழக்கு, தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளுக்கு டிசம்பர் 1-ம் தேதி இரவு முதலும், கிழக்கு இலங்கை கடலோரம் மற்றும் குமரி முனை, மன்னார் வளைகுடா, தமிழகம் மற்றும் கேரள கடலோர பகுதிகளுக்கு டிசம்பர் 2ம் தேதி முதலும், லட்சத் தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு டிசம்பர் 3ம் தேதி காலை முதலும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.