

‘‘பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகள், அடுத்த காலாண்டில் ஜிடிபி.யை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2 சாலை மேம்பாலங்களைத் திறந்து வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
கரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்திய ஜிடிபி கடந்த 2 காலாண்டுகளாக இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இத்தகைய வீழ்ச்சியில் இருந்து பொருளாதாரத்தை மீட்க பிரதமர் நரேந்திர மோடி கடும் முயற்சிகளை எடுத்து வருகிறார்.
கடந்த சில மாதங்களில் அவர் கொண்டு வந்துள்ள சீர்திருத்தங்கள், திட்டங்கள் கரோனா பரவல் காரணமாக ஏற்படும் நீண்ட கால பாதிப்புகளை கவனத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளன. இந்தச் சீர்திருத்தங்கள் அடுத்த காலாண்டில் இந்தியப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் சமீபத்திய ஜிடிபி புள்ளிவிவரங்களைப் பார்க்கும் போது நாம் 6 சதவிகிதம் மட்டுமே பின்தங்கி இருக்கிறோம். அடுத்த காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி பாதையில் மீண்டும் முன்னேறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல்- ஜூன் காலாண்டில் இந்திய ஜிடிபி மைனஸ் 23.9 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. அதன்பிறகு பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் எடுத்ததால் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக மீண்டு வந்திருக்கிறது. சமீபத்திய புள்ளிவிவரங்கள்படி தற்போது ஜிடிபி மைனஸ் 7.5 சதவீதமாக உள்ளது. இது அடுத்து வரும் காலாண்டுகளில் முன்னேற்றப் பாதையில் செல்லும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.