

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் சித்தாந்த் பத்ரா, வயது 18. அப்பா இல்லை. அம்மாவிடம் வளர்ந்து வந்தார். அவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். அதன்பின், ஆதரவற்ற நிலையில் இருந்து வருகிறார்.
எனினும், பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதினார். அதில், அகில இந்திய அளவில் 270-வது இடத்தைப் பிடித்தார். அதன்பின், பாம்பே ஐஐடி.யில் மின்சார பொறியியல் படிக்க பி.டெக் தேர்ந்தெடுத்தார். ஆனால், 2 வாரங்களில் அவருடைய ‘சீட்’ ரத்து செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
பாம்பே ஐஐடி.யில் சேர ஆன்லைனில் படிப்படியாக சில தகவல்களைப் பதிவு செய்து நிறைவு செய்ய வேண்டும். அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 18-ம் தேதி பி.டெக் பாடப்பிரிவுக்கு பத்ரா விண்ணப்பித்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவருடைய பதிவெண்ணை மீண்டும் உறுதி செய்வது தொடர்பாக அக்டோபர் 31-ம் தேதி ஆன்லைனில் மீண்டும் சில தகவல்களை அளித்தார்.
அப்போது அவர் தவறுதலாக, ‘இருக்கை ஒதுக்கீடு வாபஸ் பெறவும்’ என்ற பகுதியைக் ‘கிளிக்’ செய்து விட்டார். இதனால் அவருக்கு பாம்பே ஐஐடி.யில் ஒதுக்கப்பட்ட இடம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்தத் தகவல் கடந்த 10-ம் தேதி பத்ராவுக்கு தெரிய வந்தது. மின்சார பொறியியல் பாடப்பிரிவில் மொத்தம் 93 இருக்கைகள் உள்ளன. அவற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் சேர்க்கை இறுதிப் பட்டியலில் பத்ரா பெயர் இடம்பெறவில்லை.
இதுகுறித்து பத்ரா கூறும்போது, ‘‘ஐஐடி.யில் சேர்வதற்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அதன்பிறகு ஆன்லைனில் பல சுற்றுகளில் தகவல்களை பூர்த்தி செய்வது எனக்கு தேவையில்லை என்று நினைத்து அதை கிளிக் செய்தேன்’’ என்கிறார்.
இதுகுறிதது பாம்பே உயர் நீதிமன்றத்தில் பத்ரா வழக்குத் தொடர்ந்தார். ‘‘தவறுதலாக ‘இருக்கை வாபஸ்’ பகுதியை கிளிக் செய்துவிட்டேன். எனக்கு பாம்பே ஐஐடி.யில் ஒரு இருக்கை ஒதுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார். இந்த மனுவை கடந்த 19-ம் தேதி விசாரித்த பாம்பே உயர் நீதிமன்றம், பத்ராவுக்கு சீட் வழங்குவது குறித்து பரிசீலிக்க ஐஐடி.க்கு உத்தரவிட்டது.
ஆனால், ‘தாமதமான பதிவு’க்கு கடைசி நாளான கடந்த 23-ம் தேதி, பத்ராவின் கோரிக்கையை ஐஐடி நிராகரித்தது. இதுகுறித்து ஐஐடி பதிவாளர் ஆர்.பிரேம்குமார் கூறும்போது, ‘‘ஐஐடி.க்கு வாபஸ் ஒப்புதலை ரத்து செய்யும் அதிகாரம் இல்லை. தற்போது இடம் இல்லை. அடுத்த 2021-ம் ஆண்டுதான் பத்ரா புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்’’ என்று கூறினார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் பத்ரா மேல்முறையீடு செய்துள்ளார். இவரது மனு இன்று விசாரணைக்கு வருகிறது.