Published : 30 Nov 2020 08:17 PM
Last Updated : 30 Nov 2020 08:17 PM

ஆண்டாண்டு காலமாக நடந்த மோசடிகளால் விவசாயிகள் அச்சம்: பிரதமர் மோடி கடும் தாக்கு

வாரணாசியில், வாரணாசி- பிரயாக்ராஜ் தேசிய நெடுஞ்சாலை -19 வழித்தடத்தில் 6-வழி அகலச் சாலை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், காசியை அழகு படுத்த முன்பு மேற்கொண்ட திட்டத்துடன், இணைப்பு பணிகள் முடிவடைந்ததையும் நாம் பார்க்கிறோம் என கூறினார். வாரணாசியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய நெடுஞ்சாலையில் இதற்கு முன் செய்யப்படாத பணிகள், பாலங்கள், சாலைகளை அகலப்படுத்துதல் போன்ற பணிகள் செய்யப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

இந்த சாலைகள் விரிவாக்க திட்டம், விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என பிரதமர் குறிப்பிட்டார். கிராமங்களில் நவீன சாலைகளுடன், குளிர்பதன கிடங்குகள் போன்ற கட்டமைப்புகளையும் உருவாக்கும் முயற்சிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதி உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

அரசின் முயற்சிகள் மற்றும் நவீன கட்டமைப்புகளால் விவசாயிகள் எவ்வாறு பயன்பெறுகின்றனர் என்பதை உதாரணங்களுடன் பிரதமர் எடுத்துரைத்தார். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, 2 ஆண்டுகளுக்கு முன்பு சண்டாலியில், கருப்பரிசி அறிமுகம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

கடந்தாண்டு, ஒரு விவசாய குழு அமைக்கப்பட்டு, காரீப் பருவத்தில் விளைவிக்க இந்த அரிசி சுமார் 400 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாக அவர் கூறினார். சாதாரண அரிசி கிலோ ரூ.35 முதல் ரூ.40க்கு விற்கும்போது, கருப்பரிசி கிலோ ரூ.300க்கு விற்கப்பட்டது. முதல் முறையாக, இந்த அரசி ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் கிலோ ரூ.800 விலையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

இந்திய வேளாண் தயாரிப்புகள் உலகம் முழுவதும் பிரபலம் என கூறிய பிரதமர், மிகப் பெரிய சந்தையும், அதிக விலையும் நமது விவசாயிகளுக்கு ஏன் கிடைக்க கூடாது என கேள்வி எழுப்பினார். வேளாண் சீர்திருத்தங்கள், விவசாயிகளுக்கு புதிய விருப்பத் தேர்வுகளையும், புதிய சட்ட பாதுகாப்பையும் வழங்கியுள்ளன என கூறிய பிரதமர், அதே நேரத்தில், பழைய முறையும் தொடர்கிறது. ஒருவர் விரும்பினால் அதில் தொடரலாம் என்றார். முன்பு சந்தைக்கு வெளியே விற்றால் சட்ட விரோதம் , ஆனால் தற்போது, மண்டிக்கு வெளியே நடக்கும் விற்பனை மீது சிறு விவசாயியும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

கொள்கைகள், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அரசு உருவாக்குகிறது என பிரதமர் கூறினார். எதிர்கட்சிகளை விமர்சித்து பிரதமர் கூறுகையில், ‘‘முன்பு அரசின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன, ஆனால் தற்போது, வெறும் சந்தேகங்களின் அடிப்படையில் விமர்சனம் உள்ளது என்றார். நடக்காதது பற்றியும், இனிமேல் நடக்கப் போகாத விஷயம் பற்றியும் சமூகத்தில் குழப்பம் பரப்பப்படுகிறது. இவர்கள் எல்லாம் பல தசாப்தங்களாக விவசாயிகளை தொடர்ச்சியாக ஏமாற்றியவர்கள் என அவர் கூறினார்.

கடந்தகால போலித்தனங்கள் பற்றி தொடர்ந்து கூறிய பிரதமர், குறைந்தபட்ச ஆதரவு விலை முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், கொள்முதல் குறைந்த அளவில் நடந்தது. இந்த மோசடி பல ஆண்டுகள் தொடர்ந்தது. விவசாயிகள் பெயரில், கடன் தள்ளுபடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சென்றடையவில்லை. விவசாயிகள் பெயரில் பெரிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஒரு ரூபாயில் 15 பைசாதான், விவசாயியை சென்றடைகிறது என முந்தைய ஆட்சியாளர்களே நம்பினர். இது திட்டங்களின் பெயரில் நடந்த மோசடி.

கடந்த காலம் முழுவதும் மோசடிகள் இருந்தபோது, இரண்டு விஷயங்கள் மட்டும் இயல்பாக இருந்தன என பிரதமர் கூறினார். முதலாவது, அரசின் வாக்குறுதிகள் பற்றி விவசாயிகள் சந்தேகத்துடன் இருந்தது. இரண்டாவது வாக்குறுதியை மீறுபவர்கள், பொய்யை பரப்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர். அதுதான் இன்னும் நடக்க போகிறது என பிரதமர் கூறினார். மத்திய அரசின் சாதனைகளை பார்க்கும்போது, உண்மை தானாக வெளிவரும் என அவர் கூறினார்.

யூரியாவின் கள்ள சந்தையை நிறுத்தி, விவசாயிகளுக்கு தேவையான யூரியா வழப்படும் என அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றியதாக அவர் கூறினார். ஸ்வாமிநாதன் ஆணையம் பரிந்துரைப்படி, உற்பத்தி விலையை விட 1.5 மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கப்படும் என்ற வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றியதாக அவர் கூறினார். இந்த வாக்குறுதி காகிதத்தில் மட்டும் நிறைவேற்றப்படவில்லை, இது விவசாயிகளின் வங்கி கணக்கை சென்றடைந்து என பிரதமர் கூறினார்.

2014ம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில், விவசாயிகளிடமிருந்து ரூ.6.5 கோடி அளவுக்கு பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என கூறிய பிரதமர், அடுத்த 5 ஆணடுகளில் ரூ.49,000 கோடிக்கு பருப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன எனவும், இது 75 மடங்கு உயர்வு என்றும் பிரதமர் கூறினார்.

2014ம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடிக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், அதை தொடர்ந்த 5 ஆண்டுகளில், ரூ.5 லட்சம் கோடிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இது இரண்டரை மடங்கு அதிகம் எனவம் பிரதமர் தெரிவித்தார். 2014ம் ஆண்டுக்கு முந்தை 5 ஆண்டுகளில், கோதுமை ரூ.1.5 லட்சம் கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டதாகவும, அதற்கு பிந்தைய 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடிக்கு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இது 2 மடங்கு அதிகம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

குறைந்தபட்ச ஆதரவு விலையும், மண்டிகளும் ஒழிக்கப்படக் கூடும் என்றால், அரசு இவ்வளவு செலவு செய்யுமா? என பிரதமர் கேள்வி எழுப்பினார். மண்டிகள் நவீன மயமாக்கத்துக்கு, அரசு கோடிக்கணக்கில் செலவு செய்கிறது என்பதை அவர் வலியுறுத்தினார்.

எதிர்கட்சிகளை விமர்சித்த பிரதமர், பிரதமரின் கிஷான் சம்மான் நிதி பற்றி கேள்வி எழுப்புபவர்கள், தேர்தலை முன்னிட்டு இந்த நிதி வழங்கப்படுவதாகவும், தேர்தலுக்குப்பின் இந்தப் பணம் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என வதந்தி பரப்புகின்றனர் என்றார். எதிர்கட்சி ஆளும் ஒரு மாநிலத்தில், அரசியல் நோக்கம் காரணமாக, இந்த திட்டத்தின் பயன்களை விவசாயிகள் பெற அனுமதிக்கப்படவில்லை என பிரதமர் கூறினார். அரசின் உதவிகள், 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகின்றன. இதுவரை, விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி சென்றடைந்துள்ளது என பிரதமர் கூறினார்.

ஆண்டாண்டு கால மோசடி மக்களை சந்தேகம் அடையச் செய்கிறது என கூறிய பிரதமர், தற்போது மோசடி இல்லை எனவும், கங்கை நீரை போன்ற தூய்மையான நோக்கத்துடன் ஒவ்வொரு வேலையும் செய்யப்படுகிறது என்றார். சந்தேகத்தின் அடிப்படையில் மாயத் தோற்றத்தை பரப்புபவர்கள், மக்கள் முன்பு தொடர்ந்து அம்பலப்படுத்தப்படுகின்றனர் என பிரதமர் குறிப்பிட்டார்.

அவர்களின் பொய்களை விவசாயிகள் புரிந்து கொள்ளும்போது, மற்றொரு விஷயம் பற்றி அவர்கள பொய்யை பரப்பத் தொடங்குகின்றனர். கவலைப்படும் விவசாய குடும்பங்களுக்கு அரசு தொடர்ச்சியாக பதில் அளித்து வருகிறது என பிரதமர் கூறினார். வேளாண் சீர்திருத்தம் பற்றி இன்று சந்தேகப்படும் விவசாயிகள், எதிர்காலத்தில் இதே சீர்திருத்தத்தை பின்பற்றி தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்வர் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x