Last Updated : 30 Nov, 2020 05:01 PM

 

Published : 30 Nov 2020 05:01 PM
Last Updated : 30 Nov 2020 05:01 PM

‘கிங் காங்’, ‘கரோனா தாமஸ்’, ‘ஜேபி77’, ‘ஜிஜோ மோடி’: வித்தியாசமான பெயர்களால் களைகட்டும் கேரளா உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம்

கோப்புப்படம்

திருவனந்தபுரம்

'உங்கள் ஓட்டு கிங்காங்கிற்கே', 'மோடியின் சின்னம் சுத்தியல்', 'ராணி ஜான்ஸிக்கு வாக்களியுங்கள்', 'கரோனா தாமஸுக்கு ஓட்டளியுங்கள்', 'ஜேபி77 மறக்காதீங்க', 'உங்கள் பிரேசிலியாவுக்கு வாக்களியுங்கள்'..

இவை எல்லாம் கேரள உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைக்கப்பட்டுள்ள வித்தியாசமான பெயர்களாகும்.

கேரளாவில் டிசம்பர் 10-ம் தேதி தொடங்க உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. வித்தியான பெயர்களுடன் வேட்பாளர்கள் சாலையில் வலம்வருவதும், மக்களிடம் வாக்குக் கேட்பதும் என பிரச்சாரம் களைகட்டியுள்ளது.

பிரேசிலியா, லுக்மேன், கரோனாதாமஸ், ஜிஜோமோடி என வித்தியாசமான பெயர்களுடன் வலம் வந்து வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குக் கேட்பதால் மக்கள் ரசனையுடன் அவர்களின் பிரச்சாரத்தைக் கேட்டு மகிழ்கின்றனர்.

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத் தேர்தல் டிசம்பர் 8-ம் தேதியும், 2-ம் கட்டம் 10-ம் தேதியும், 3-ம் கட்டம் 14-ம் தேதியும், 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.

இந்தத் தேர்தலில் மொத்தம் 36,305 பெண் வேட்பாளர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் உள்பட 74,899 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் 8,387 வேட்பாளர்கள் அதிகபட்சமாக களத்தில் உள்ளனர். வயநாட்டில் 1,857 வேட்பாளர்கள் குறைந்தபட்சமாக போட்டியிடுகின்றனர்.

டிசம்பர் 8-ம் தேதி நடக்கும் முதல் கட்டத் தேர்தல் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி மாவட்டங்களுக்கு நடக்கிறது. 10-ம் தேதி நடக்கும் 2-ம் கட்டத் தேர்தல் கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கும் 14-ம் தேதி நடக்கும் 3-ம் கட்டத் தேர்தல் மலப்புரம், கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும் நடக்கிறது.

941 கிராம பஞ்சாயத்துகள், 152 மண்டல பஞ்சாயத்துகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 86 நகராட்சிகள், 6 மாநகராட்சிகளுக்கு பிரதிநிதிகளை 2.76 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள்தான் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 57 வயது வேட்பாளர் கே.கிங் காங் எனும் வேட்பாளர் மராரிகுளம் பஞ்சாயத்தில் போட்டியிடுகிறார்.

ஹாலிவுட் திரைப்படத்தில் கேட்டுப் பழகிய பெயரான கிங் காங் எனும் பெயரை மக்கள் பிரச்சாரத்தில் கேட்கும் போது திரும்பிப் பார்க்காமல் செல்பவர்கள் யாருமில்லை. அனைவரின் கவனத்தையும் கிங் காங் எனும் பெயர் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து கிங் காங் கூறுகையில் “ எனக்கு இந்த பெயர் வைத்ததற்கு காரணமே என் பெற்றோர், மூத்த சகோதர்கள்தான். என்னுடைய பெயரை பலரும் கிண்டல் செய்துள்ளார்கள் இப்போது அந்த பெயர்தான் வெற்றியைதர இருக்கிறது. மக்கள் என் பெயரைக் கேட்டாலே விருப்பத்துடன் திரும்பிப் பார்க்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

இது தவிர ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் கால்பந்து ரசிகர் பிரேசிலியாவும் கவனத்தை ஈர்த்துள்ளார். கோழிக்கோட்டின் வடக்குப்பகுதியில் உள்ள பையானகல் வார்டில் பிரேசிலியா போட்டியிடுகிறார்.

கோழிக்கோடு கயன்னா கிராமத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜேபி 77 எனும் பெயரும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து ஜேபி 77 கூறுகையில் “ என் தந்தை தீவிர ஆர்எஸ்எஸ் தொண்டர். ஜெயப்பிரகாஷ் நாராயண் விஸ்வாசி. எமர்ஜென்ஸி காலத்தில் என் தந்தைசிறையில் இருந்த போதுநான் பிறந்தேன்.அதனால் ஜேபி77 என பெயர் வைத்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் கொல்லம் மாநகராட்சியில், மதிலில் வார்டியில் போட்டியிடும் கரோனா தாமஸ், பத்தினம்திட்ட மாவட்டத்தில் மலையாளப்புழா பஞ்சாயத்தில் போட்டியிடும ஜிஜோ மோடி எனும் பெயரும் வாக்காளர்களை ஈர்த்துள்ளது. ஜிஜோ மோடி, பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்குள் நுழைந்துள்ளார்.
இது தவிர ராணி ஜான்ஸி, பில்குல் பி.கே., லுக்மேன், விசித்திரன் ஆகிய பல பெயர்கள் மக்களை ஈர்த்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x