Last Updated : 30 Nov, 2020 12:48 PM

 

Published : 30 Nov 2020 12:48 PM
Last Updated : 30 Nov 2020 12:48 PM

டெல்லிக்குள் வரும் 5 எல்லைகளையும் தடுப்போம்: 5-வது நாளாக வலுக்கும் விவசாயிகள் போராட்டம்: கடும் போக்குவரத்து நெரிசலால் திணறும் டெல்லி 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புறநகரில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தால், டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு வரும் 5 நுழைவுவாயில்களையும் தடுப்போம் என்று விவசாயிகள் கூறியிருப்பதால், 5-வது நாளாகப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

தெற்கு டெல்லியில் உள்ள புராரி மைதானத்துக்குச் சென்றபின்புதான் பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கோரிக்கையை ஏற்க விவசாயி அமைப்புகள் மறுத்துவிட்டன. நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு மட்டுமே சம்மதிப்பதாகத் தெரிவித்துள்ளன.

இன்று பிற்பகலில் விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூடிப் பேசி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய உள்ளனர். விவசாயிகள் நாள்தோறும் குவிந்து வருவதால், போக்குவரத்து நெரிசலில் டெல்லி சிக்கித் திணறி வருகிறது.

டெல்லியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததைத் தொடர்ந்து டெல்லி போக்குவரத்து போலீஸார் வாகன ஓட்டிகளுக்கு மாற்றுப்பாதையை அறிவித்துள்ளனர்.

டெல்லி போக்குவரத்து போலீஸார் ட்விட்டரில் பதிவிட்ட அறிவிப்பில், “சிங்கு, திக்ரி எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்துச் செல்லவும். முகார்பா சவுக், ஜிடிகே சாலையிலிருந்து போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் இருப்பதால், சிக்னேச்சர் பாலம், ரோஹினி, ஜிடிகே சாலை, என்ஹெச்44, சிங்கு எல்லை வழியாகச் செல்வதைத் தவிர்க்கவும்.

திக்ரி எல்லை முற்றிலும் மூடப்பட்டுள்ளது. ஹரியாணாவிலிருந்து வரும் ஜார்கோடா, தான்ஸா, தருலா, ஜதிகேரா, பதுசாரி, கபசேரா, ரஜோரி, என்ஹெச்8, பாலம் விஹார், துந்தாஹேரா எல்லையைப் பயன்படுத்தவும்” எனத் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 3-ம் தேதி 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கப் பிரிநிதிகளுடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஆனால், அதற்கு முன்பாக, விவசாயிகள் புராரி மைதானத்துக்குச் செல்ல வேண்டும் என்று அமித் ஷா வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இந்த வேண்டுகோளை ஏற்க மறுத்த விவசாயிகள், சிங்கு, திக்ரி எல்லைப் பகுதியில் தொடர்ந்து 5-வது நாளாகக் கடும் பனியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமித் ஷாவின் வேண்டுகோளை ஏற்க முடியாது. புராரி மைதானம் என்பது திறந்தவெளி சிறைச்சாலை போன்றது. அங்கு செல்ல முடியாது என விவசாயிகள் மறுத்துள்ளனர். இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 5-வது நாளாக வலுத்துள்ளது.

இதற்கிடையே நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் விவசாயிகள் போராட்டம் குறித்தும் நீண்டநேரம் விரிவான ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x