

கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜஸ்தான் மாநில பாஜக எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி (வயது 59) சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எம்எல்ஏ மகேஸ்வரி, குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு காலமானார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தானில் உள்ள ராஜ்சமந்த் தொகுதியில் தொடர்ந்து 3 முறை எம்எல்ஏவாக கிரண் மகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மகேஸ்வரியின் மறைவுக்கு பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிபி ஜோஷி, பாஜக மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், “பாஜக மூத்த தலைவரும், ராஜசமந்த் தொகுதி எம்எல்ஏவுமான கிரண் மகேஸ்வரியின் மறைவுச் செய்தி கேட்டு வேதனை அடைகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும் இந்தத் துயரமான நேரத்தில் ஆறுதல்களைத் தெரிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவை சபாநாயகர் சி.பி.ஜோஷி ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், “ராஜசமந்த் தொகுதி எம்எல்ஏ கிரண் மகேஸ்வரியின் மறைவுச் செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். மகேஸ்வரி குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ட்விட்ரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், “பாஜக எம்எல்ஏ கிரண் மகேஸ்வரியின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைகிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், ஏழைகள், விளிம்புநிலை மக்கள் முன்னேற்றத்துக்கும் ஏராளமான பணிகளை மகேஸ்வரி செய்துள்ளார். மகேஸ்வரியின் குடும்பத்தாருக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி” எனத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, கிரண் மகேஸ்வரி கேபினட் அமைச்சராக, அதாவது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். மேலும், பாஜகவில் தேசிய பொதுச்செயலாளர், தேசியத் துணைத் தலைவர், பாஜக மகளிர் அணியின் தலைவராகவும் மகேஸ்வரி இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.