

கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் இருக்கும் மருந்து நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி நேரடியாகச் சென்று ஆய்வு நடத்திய சம்பவத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா புகழ்ந்துள்ளார். ஆனால், அதேசமயம், அந்தக் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.
கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் பயோடெக் பார்க், புனேவில் உள்ள சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஆகியவை ஈடுபட்டுள்ளன.
இந்த மருந்து நிறுவனங்களுக்கு சனிக்கிழமை நேரடியாகச் சென்ற பிரதமர் மோடி, கரோனா தடுப்பு மருந்தின் ஆய்வுப் பணி, தயாரிப்பு, பரிசோதனை நிலவரம் ஆகியவை குறித்துக் கேட்டறிந்தார். மருத்துவ விஞ்ஞானிகள், நிறுவனத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் கரோனா தடுப்பு மருந்தின் ஆராய்ச்சி நிலவரம் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசித்தார்.
பிரதமர் மோடியின் இந்தச் செயலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா புகழ்ந்துள்ளார்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் வேளையில் பிரதமர் மோடி கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிபர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் என விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், ஜைடஸ் பயோடெக் பார்க், சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி நேரடியாகச் சென்றதன் மூலம் இந்திய ஆய்வாளர்களுக்கும், அவர்களின் கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிக்கும் அங்கீகாரம் அளித்துள்ளார்.
கரோனா தடுப்பு மருந்து தயாரிப்பும் நிறுவனங்களுக்கு அங்கீகாரத்தையும், மதிப்பையும் பிரதமர் மோடியின் வருகை அளித்துள்ளது. உலகிலேயே தடுப்பு மருந்து தயாரிப்பதில் மிகப்பெரிய உற்பத்தியாளர் என்பதைப் பல ஆண்டுகளாக இந்தியா கட்டமைத்துள்ளது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முன்களத்தில் போராடி வரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தேசத்துக்கும் பிரதமர் மோடியின் வருகை புதிய நம்பிக்கையைத் தரும்.
கரோனா தடுப்பு மருந்து நடைமுறைக்கு வந்தபின், திறன்வாய்ந்த, தகுதியான தளத்தின் மூலம் அனைவருக்கும் கிடைக்க பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியின் செயலை விமர்சித்துள்ளார்.
அதில், “டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிபர்களுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, விமானத்தில் பிரதமர் மோடி பறந்துள்ளார்.
கரோனா தடுப்பு மருந்துகளை அறிவியல் விஞ்ஞானிகள் உருவாக்குகிறார்கள். தேசத்துக்கு விவசாயிகள் உணவு வழங்குகிறார்கள். ஆனால், மோடியும், பாஜகவும் தொலைக்காட்சியைக் கையாள்கிறார்கள்” என விமர்சித்துள்ளார்.
கரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சிப் பணியை நேரடியாக ஆய்வு செய்த பிரதமர் மோடியின் செயலுக்கு காங்கிரஸ் கட்சிக்குள் பாராட்டும், எதிர்ப்பும் என முரண்பட்ட நிலை உருவாகியுள்ளது.