

ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி, தன்னை கொடுமைப்படுத்தினர், கொலை செய்ய முயற்சித்தார் என்று அவரது மனைவி போலீஸில் புகார் அளித்தார்.
இதையடுத்து தலைமறைவான சோம் நாத் பாரதி, முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை யடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், போலீஸில் சரணடையும்படி உத்தரவிட்டது.
இதையடுத்து போலீஸில் சரணடைந்த சோம்நாத் பாரதி, ஜாமீன் கேட்டு டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சோம்நாத் பாரதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டது. மேலும், ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும், அதற்கு சமமான பிணையத் தொகை ஒருவர் வழங்க வேண்டும், போலீஸாரின் விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும், முன் அனுமதி பெறாமல் நாட்டை விட்டு எங்கும் செல்ல கூடாது ஆகிய நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்தது.
முன்னதாக ஜாமீன் மனு மீது நேற்றுமுன்தினம் விசாரணை நடக்கையில் சோம்நாத் பாரதியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறுகையில், ‘‘அரசியல் உள்நோக்கத்துடன் பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக.வின் தூண்டுதலின் பேரில் வழக்கு தொடர்ந்துள்ளனர்’’ என்றார்.