Last Updated : 30 Nov, 2020 03:10 AM

 

Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

காவல் துறை தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார்; உ.பி., நொய்டாவில் 2 காவலர் உள்ளிட்ட 9 பேர் கைது: ஏற்கெனவே 100 பேரை பணியில் சேர்த்தது அம்பலம்

புதுடெல்லி

காவல் துறை தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்து சுமார் 100 பேரை பணியமர்த்தியதாக உத்தரபிரதேசம் நொய்டாவில் டெல்லியைச் சேர்ந்த 2 காவலர் கள் உட்பட 9 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் செக்டர் 62 பகுதியில் டெல்லி காவல் துறையின் காவலர்கள் பணிக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில், நேற்று முன்தினம் தேர்வுஎழுத வந்த அர்பித், அமன் மற்றும் தினேஷ் சவுத்ரி ஆகியோர்சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தமையால் நிறுத்தி வைக்கப்பட்டனர். ஹரியாணாவின் பல்வலை சேர்ந்த இவர்களை விசாரிக்க நொய்டா காவல் துறையின் துணை ஆணையரும் தமிழருமான சு.இ.ராஜேஷ் ஐபிஎஸ் தம் படையுடன் வந்தார்.இவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.

இக்கும்பலில் டெல்லி காவல் துறையின் ஷிவ்குமார், தினேஷ் பிரஜாபதி எனும் 2 காவலர்கள் உள்ளிட்ட 9 பேர் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் சுற்றி வளைக்கப்பட்டனர். இவர்கள் தேர்வு மையத்தை சுற்றி விலைஉயர்ந்த வாகனங்களில் காத்திருந்தனர். ஓட்டுநர் உரிமம், ஆதார் போன்றவற்றின் படங்களை மார்பிங் செய்து போலி அடையாள அட்டைகளை உருவாக்கி தேர்வுகள் எழுதப்பட்டுள்ளன. இதில், தேர்வு எழுதிய 4 இளைஞர்களும் மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சியில் இருந்தவர்கள்.

கடந்த 2017 முதல் இவர்கள், மத்திய உள்துறை மற்றும் ரயில்வே துறைகளின் பணிக்கான மத்திய தேர்வாணையத்திலும் (எஸ்எஸ்சி), டெல்லி மற்றும் ஹரியாணா காவல் துறை பணிக்காக அம்மாநில தேர்வுகளையும் ஆள்மாறாட்டம் செய்து எழுதியுள்ளனர். இத்தேர்வு எழுத இக்கும்பல் பணிக்கு ஏற்றபடி ரூ.15 லட்சம் முதல் 40 லட்சம் வரை பெற்று வந்துள்ளது. இவ்வாறு இதுவரை சுமார் 100 பேர் தேர்வாகி பணியில் அமர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’நாளேட்டிடம் துணை ஆணையரான ராஜேஷ் கூறும்போது, "டெல்லி காவலர் தினேஷின் தாய்மாமாவான ரவிகுமார் இக்கும்பலின் தலைவர். டெல்லி வருமான வரித்துறையின் ஆய்வாளரான இவர் கைப்பேசியை அணைத்து விட்டு தலைமறைவாகி விட்டார். தேர்வு எழுதுவதற்காகவே சுமார்25 பேர் இக்கும்பலிடம் இருந்திருக்கக்கூடும். விண்ணப்பிப்பதில் தொடங்கி அனைத்தையும் செய்யும் இக்கும்பலில் மேலும் பலரை தேடி வருகிறோம்" என்றார்.

இதற்கு முன் உ.பி.யின் மெயின்புரி, பதோஹி உள்ளிட்ட பல மாவட்டங்களில் எஸ்பியாக இருந்த தமிழரான ராஜேஷ், அங்கு பல முக்கிய வழக்குகளை தீர்த்து வைத்து பாராட்டுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x