Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

ஹைதராபாத்தை தொழில்வளம் மிக்க நகரமாக உருவாக்குவோம்: மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா வாக்குறுதி

ஹைதராபாத்

நவாப்புகளின் நகரமாக உள்ள ஹைதராபாத்தை தொழில்வளம் மிக்க நகரமாக பாஜக மாற்றும் என அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்தார்.

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. 150 வார்டுகள் உள்ள இந்த மாநகராட்சியில் சுமார் 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தெலங்கானா மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இந்தத் தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணமாக ஹைதராபாத் வந்தார். அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், பின்னர் ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா மாநில பாஜக அலுவலகத்துக்கு சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஹைதராபாத் மாநகராட்சியின் மேயர் பதவியை பாஜகவுக்கு மக்கள் வழங்கினால், தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சி பெற்ற நகரமாக ஹைதராபாத்தை மாற்றுவோம். தெலங்கானாவுக்கும் ஹைதராபாத்துக்கும் ஏராளமான நிதியுதவிகளை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.

ஆளும் கட்சியான டிஆர்எஸ்கடந்த தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளில், ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை. குடும்ப அரசியல் இங்கு நடக்கிறது. ஹைதராபாத் மேயர்பதவி, பாஜகவுக்கு வழங்கப்பட்டால் நவாப்புகளின் நகரமாக உள்ள இதனை தொழில்வளம் மிக்க நகரமாக மாற்றுவோம். இவ்வாறு அமித் ஷா கூறினார்.தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக, அங்குள்ள பாக்கியலட்சுமி கோயிலில் அவர் வழிபட்டார். படம்: பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x