

மகாராஷ்டிர மாநிலம் பர்பானியில் உள்ள பால்வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருபவர் அஜய் டேக். இவர் அண்மையில் பிரதமர் மோடியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்தார். அந்த ஓவியத்துடன் ஒரு கடிதம் எழுதி பிரதமருக்கு அனுப்பி வைத்தார். ஓவியத்தைப் பார்த்து வியந்த பிரதமர் மோடி சிறுவனுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “உங்களதுஓவியத் திறமை மிகவும் அபாரம்.கடிதத்தில் நீங்கள் வெளிப்படுத்திய நாட்டைப் பற்றிய உங்கள்கருத்துகள் உங்கள் எண்ணங்களின் அழகை விளக்குகின்றன. சமூகத்தின் முன்னேற்றத்துக்காக உங்களது படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்டும். சமூகத்தில் தொடர்புடைய பிரச்சினைகள்குறித்த விழிப்புணர்வை உங்கள்நண்பர்களிடம் ஏற்படுத்த திறமையைப் பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிரதமர் மோடி பேசும் மனதின் குரல் நிகழ்ச்சி பள்ளி மாணவர்களிடையே மிகவும் பிரபலமாகவுள்ளது. அவ்வப்போது தேர்வுகள், அறிவியல் தொடர்பான விஷயங்களை மோடி பகிர்ந்து வருகிறார். பிரதமருக்கு நன்றியையும் பாசத்தையும் தெரிவிக்க, மாணவர்களும் அவருக்கு கடிதம் எழுதி வருகின்றனர்" என கூறப்பட்டுள்ளது.