

ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மட்டும்தான் இன்னும் வரவில்லை என்று அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இதாஹாதுல் முஸ்லிம் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி கிண்டல் செய்துள்ளார்.
டிசம்பர் 1-ம் தேதி ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக, காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன.
பாஜக சார்பில் இதுவரை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர். இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரத்துக்காக வர உள்ளார்.
இந்தச் சூழலில் ஹைதராபாத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஏஏஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் என்பது மத்தியில் பிரதமர் பதவிக்கு மோடியை மாற்றிவிட்டு வேறு ஒருவரைத் தேர்ந்தெடுப்பது போன்று முக்கியமானதாகும்.
பாரம்பரியமான ஹைதராபாத் நகரை மாற்ற வேண்டும் என்று உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பேசியிருக்கிறார். ஒவ்வொன்றின் பெயரையும் மாற்றிப் புதிய பெயர் வைக்கவே பாஜகவினர் விரும்புகிறார்கள். நாளை உங்களின் பெயரும், அடையாளமும் மாற்றப்படக்கூடும்.
ஆனால், ஹைதராபாத்தின் அடையாளம், பெயர் மாற்றப்படக் கூடாது. ஹைதரபாத் பெயரை மாற்ற வேண்டும் என்று ஆதித்யநாத் பேசியுள்ளார். அவர் என்ன இந்த நகரை கான்ட்ராக்ட் எடுத்துள்ளாரா?
ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் போன்று இது தெரியவில்லை. பாஜகவுக்கு ஆதரவாகப் பல்வேறு தலைவர்கள் இதுவரை பிரச்சாரம் செய்துள்ளார்கள். கர்வானில் நான் பிரச்சாரத்தில் இருந்தபோது, ஒரு குழந்தை கூறியது, பாஜகவினர் பிரச்சாரத்துக்கு ட்ரம்ப்பையும் அழைத்திருக்க வேண்டும் என்றது. ஆம், உண்மையில் பாஜகவுக்கு ஆதரவாக ட்ரம்ப் மட்டுமே பிரச்சாரம் செய்யாமல் எஞ்சியுள்ளார்''.
இவ்வாறு ஒவைசி தெரிவித்தார்.
ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் தற்போது மிகப்பெரிய கவுரவத் தேர்தலாகப் பார்க்கப்படுகிறது. பாஜக எத்தனை இடங்களில் வென்றுவிடும் என்று பார்க்கிறேன் என்று கடந்த வாரம் பிரதமர் மோடிக்கு ஒவைசி சவால் விடுத்தார்.
அதைத் தொடர்ந்து நடந்த பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை அரசியல் கட்சித் தலைவர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அசாசுதீன் ஒவைசியை நவீனகால முகமது அலி ஜின்னா என்று பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. சூர்யா விமர்சித்தார்.
மாநில பாஜக தலைவர் பந்தி சஞ்சய் கூறுகையில், “ஹைதராபாத்தில் உள்ள பாகிஸ்தானியர்கள், ரோஹிங்கியா மக்கள் மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப்படும்” எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.