அமலாக்கப் பிரிவு இயக்குநர் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மத்திய அமலாக்கப் பிரிவு இயக்குநராக இருக்கும் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று வழக்குத் தொடர்ந்துள்ளது.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் சார்பில் இயங்கும் காமன் காஸ் எனும் அமைப்பு சார்பில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமலாக்கப் பிரிவு இயக்குநராக சஞ்சய் குமார் மிஸ்ரா கடந்த 2018-ம் ஆண்டு 2 ஆண்டுகளுக்கு மட்டும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில், மிஸ்ராவின் பதவிக் காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து காமன் காஸ் எனும் தன்னார்வ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளது.

அமலாக்கப் பிரிவு இயக்குநர் மிஸ்ரா: படம் உதவி | ட்விட்டர்
அமலாக்கப் பிரிவு இயக்குநர் மிஸ்ரா: படம் உதவி | ட்விட்டர்

அந்த அமைப்புத் தாக்கல் செய்த மனுவில், “ 2003-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, பிரிவு 25-ன் கீழ் அமலாக்கப் பிரிவு மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் கண்டிப்பாக நடந்துகொள்ள வேண்டும்.

கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி அமலாக்ககப் பிரிவு இயக்குநராக சஞ்சய் குமார் மிஸ்ரா 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், அந்த உத்தரவைத் திருத்தி தற்போது 3 ஆண்டுகளாக மத்திய அரசு மாற்றியுள்ளது.

இதன்படி கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் திருத்தி, மிஸ்ராவின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, அமலாக்கப் பிரிவு இயக்குநராக இருக்கும் ஒருவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கவோ அல்லது, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவைத் திருத்தவோ எந்த அதிகாரமும் இல்லை. இதுபோன்று உத்தரவைத் திருத்தி ஓராண்டு பதவிக் காலத்தை நீட்டித்தது சட்டவிரோதம்” எனத் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in