வீட்டில் இருந்து பணிபுரிய 66% பேர் விருப்பம்

வீட்டில் இருந்து பணிபுரிய 66% பேர் விருப்பம்
Updated on
1 min read

கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இன்னமும் கிடைக்காத சூழலில் 83 சதவீத இந்திய பணியாளர்கள் அலுவலகம் செல்வதற்கு அஞ்சுகின்றனர். ஆஸ்திரேலிய ஆய்வு நிறுவனம் பேப்பர் ஜெயன்ட் நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.

வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு 66 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்து பணி புரிவதையே விரும்புவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வீட்டிலிருந்து பணிபுரியும் சூழலுக்கு பழகியதோடு அதனால் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ளவும் தயாராகிவிட்டனர். இதனால் அலுவலக சூழலை விட வீட்டு சூழலில் அலுவலக பணிகளை நிறைவேற்ற தயாராகி விட்டதும் ஆய்வு முடிவுகள் நிரூபிக்கின்றன.

70 சதவீத மக்கள் கரோனா காலத்துக்கு முன்பிருந்த வேலை சூழலை விட தற்போது திருப்தியாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். கரோனா கட்டுப்பாடு காலத்திலும் மிகச் சிறப்பாக வீட்டிலிருந்து பணிபுரிந்ததாக 61 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

வீட்டிலிருந்து அலுவலக பணி புரிவது கவலை தருவதாக 78 சதவீதம் பேர் கருதுகின்றனர். மேலும் அலுவலகத்தில் தங்களது சக பணியாளர்கள் என்ன கருதுகின்றனர் என்ற கவலையும் பலரிடம் காணப்படுகிறது. புதிய விதிமுறைகள் வேலை சூழலை முற்றிலுமாக மாற்றியுள்ளது. மேலும் பணியாளர் மற்றும் கூட்டாக பணிகளை நிறைவேற்றுவது உள்ளிட்டவற்றில் எதிர்காலத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என தெரிகிறது.

இந்தியாவில் முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 1,425 பேரிடம் கடந்த அக்டோபரில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. ஏறக்குறைய ஒரு மாதம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான இந்திய பணியாளர்கள் தங்களுடன் பணியாற்றும் சக பணியாளர்களிடம் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, தொலை தூரத்தில் இருந்து பணிபுரிவது உள்ளிட்ட நடவடிக்கைகள் பலரையும் இத்தகைய சூழலை ஏற்றுக்கொள்ள நிர்பந்தித்துள்ளது.

அலுவலக ரீதியில் பார்க்கும் போது தங்களது நிறுவனங்கள் வேலைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக 88 சதவீத பணியாளர்கள் நம்புகின்றனர். கரோனா வைரஸ் காரணமாக தாங்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் சூழலுக்கு தள்ளப்பட்டதாக 78 சதவீத பணியாளர்கள் கருதுகின்றனர். ஆஸ்திரேலியாவில் இது 79 சதவீதமாகவும், அமெரிக்காவில் 58 சதவீதமாகவும் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in