

பெண்களின் பின்னால் போலீஸாரை அனுப்புவதை நிறுத்திவிட்டு அவர்களை நரேந்திர மோடி மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் சண்டோலியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த 60 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி அடையவில்லை என்று மோடி குற்றம்சாட்டி வருகிறார்.
ஆனால் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக அமெரிக்க அதிபர்கள் கூறி வருகின்றனர். இந்தியாவை மோடி சரியாக புரிந்து கொள்ளவில்லை. நாட்டை வலிமைப்படுத்துவேன், மக்களை வலிமையாக்குவேன் என்று அடிக்கடி அவர் கூறுகிறார். அதற்கு அவசியமே இல்லை.
நாடு ஏற்கெனவே வலிமையாகத்தான் இருக்கிறது. நாட்டு மக்களும் வலிமையாகத் தான் இருக்கிறார்கள். குஜராத்தில் ஒரு பெண்ணை வேவுபார்க்க மோடி தனது போலீஸாரை அனுப்பியுள்ளார். அந்தப் பெண்ணின் தொலைபேசி உரையாடல்களை ரகசியமாகப் பதிவு செய்துள்ளார். அதை போலீஸாரும் உள்துறை அமைச்சகமும் கேட்கும்படி செய்துள்ளார்.
முதலில் இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்துங்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டாம், அவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் கனவுகள் நிறைவேற்றப்படும். பாஜக ஆட்சிக்கு வந்தால் அதானி போன்ற தொழிலதிபர்களின் கனவுகள்தான் நிறைவேற் றப்படும். காங்கிரஸ் அன்பையும் சமாதானத்தையும் பரப்புகிறது. பாஜக வெறுப்பையும் விரோதத் தையும் வளர்க்கிறது.
இந்தியாவில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நாடு அவர்கள் அனைவருக்கும் சொந்தமானது.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.