நீதி கோரி ஹரியாணா தலித் குடும்பத்தினர் சாலை மறியல்: குழந்தைகள் சடலங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

நீதி கோரி ஹரியாணா தலித் குடும்பத்தினர் சாலை மறியல்: குழந்தைகள் சடலங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Updated on
1 min read

உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் பாதிக்கப்பட்ட ஹரியாணா மாநிலம் சன்பெட் கிராமத்தைச் சேர்ந்த தலித் குடும்பத்தின் உறவினர்கள் நீதி கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தில் தலித் வீட்டுக்கு உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி புறநகர் பகுதியில் சன்பெட் கிராமத்தில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு இச்சம்பம் நடந்தது. ஜிதேந்தர் (31), அவரது மனைவி ரேகா (28), அவர்களின் இரண்டரை வயது குழந்தை வைபவ், 11 மாத குழந்தை திவ்யா ஆகியோர் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, ராஜ்புத் இனத்தைச் சேர்ந்த சிலர் ஜிதேந்தரின் வீட்டுக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், இரு குழந்தைகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த னர். ரேகா படுகாயமடைந்தார். ஜிதேந்தருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை எண் 2-ல் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இறந்த குழந்தைகளின் சடலுங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு குவிந்த போலீஸார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in