

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடந்தது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்று கோரிய மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 214 நிலக்கரி சுரங்கங்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டன. இதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நிலக்கரிச் துறை முன்னாள் செயலர், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா உட்பட பலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதும் புகார் எழுந்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அவரிடமும் விசாரணை நடத்தினர்.
பின்னர் மன்மோகன் மீது தவறு இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை சமர்ப்பித்தது. இதற்கிடையில், ஊழல் நடந்ததாக கூறப்படும் காலக்கட்டத்தில் நிலக்கரிக் துறை அமைச்சர் பொறுப்பை வகித்த அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும் கிரிமினல் குற்றவாளியாக இணைத்து விசாரிக்க வேண்டும். அதற்காக அவருக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வர் மதுகோடா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், மன்மோகனுக்கு சம்மன் அனுப்ப கோரிய மதுகோடாவின் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ நீதிமன்ற நீதிபதி பாரத் பராஷர் நேற்று உத்தரவிட்டார்.