

கரோனா பாதிப்புகளை அடுத்து ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக வேலையிழந்து மாநிலம் திரும்பிய ஐடி பணியாளர்கள் 8000 பேருக்கு மீண்டும் வேலைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 லிருந்து கரோனா பாதிப்புகள் காரணமாக தொடர்ந்து தொடர்ச்சியான ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர். இதில் ஆயிரக்கணமான பணியாளர்கள் வேலையை இழந்தனர்.
இதனால் தனிமனித வருவாயும், நாட்டின் பொருளாதாரமும் சரிந்தநிலையில் இன்னும்கூட நிலைமை சகஜநிலைக்கு திரும்பாத நிலையே தொடர்கிறது. இதனை கருத்தில் கொண்டு மேற்கு வங்க அரசு புதிய திட்டமொன்றை அறிவித்தது. மாநில அரசு தகவல் தொழிநுட்பப் பிரிவினர் உருவாக்கிய 'கர்மா பூமி' என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
'பெங்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி' நடத்திய காணொலி சந்திப்பில் மேற்கு வங்க அரசாங்கத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை இணைச் செயலாளர் சஞ்சய் தாஸ் இதுகுறித்து கூறியதாவது:
கோவிட் வருகையோடு வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள் சொந்த ஊர் திரும்பியபோது அதில் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் வருகையும் மேற்கு வங்கத்தில் பெருகத் தொடங்கிது. வேலையின்றி தவிக்கும் இளைஞர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு திட்டமிட்டது.
ஐ.டி துறையில் வேலை தேடுவோர் மற்றும் முதலாளிகளுக்கு இடையே பாலமாக இயங்கும்வகையில் மேற்கு வங்க அரசு கர்மா பூமி தளத்தை உருவாக்கியது. கர்மா பூமி துல்லியமாக வேலைவாய்ப்பு வழங்கும் தளமல்ல. ஆனால் நிபுணர்களின் திறன்களை பதிவு செய்வதற்கான ஒன்று.
ஐடி துறையைச் சேர்ந்த பன்னாட்டு முதலாளிகளும் ஐடி தொழிலாளர்களும் கைகோர்க்கும் ஒரு தளமாக செயல்படத் தொடங்கியது. குறிப்பிட்ட காலத்திற்குள் வேலைவாய்ப்பு பெறும் வண்ணம் இச்செயலி நடைமுறைப்படுத்தப்பட்டது.
இச் செயலி மூலம் 41 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர் சுமார் 400க்கும் மேற்பட்ட பன்னாட்டு முதலாளிகளுடன் கைகோர்த்தனர். இதில் 8000 பேருக்கு பணிப் பாதுகாப்புகள் கிடைத்துள்ளன. சிங்கப்பூரை தலைமையகமாகக்கொண்ட ஐடி நிறுவனமொன்றின் முதலாளி முதல் தர நிபுணர்களை தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
மேலும் இந்த செயலி கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அவர்களும் தங்களைப் பற்றிய தரவுகளை பதிவேற்றும் வகையில் அடுத்தகட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு மேற்கு வங்க அரசாங்கத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை இணைச் செயலாளர் தெரிவித்தார்.