Last Updated : 28 Nov, 2020 11:46 AM

 

Published : 28 Nov 2020 11:46 AM
Last Updated : 28 Nov 2020 11:46 AM

10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ் ஜிகாத்தை தடுக்க உ.பியில் அவசரச் சட்டம்: ஆளுநர் ஒப்புதல்

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் : கோப்புப்படம்

லக்னோ


நேர்மையற்ற முறையில் மதம் மாறுவது, சட்டவிரோத மதமாற்றம், லவ் ஜிகாத் ஆகியவற்றைத் தடுக்க கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்துக்கு உத்தரப்பிரதேச ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையடுத்து, லக் ஜிகாத் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என அவசரச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 23-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு வழக்கின் விசாரணையில் தீர்ப்பளித்து. அந்த வழக்கில் பிறப்பில் முஸ்லிமாக இருந்த ஒரு பெண் மதம் மாறி இந்து ஆண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

கடந்த ஜூன் 29-ம் தேதி இந்து மதத்துக்கு மாறிய எந்த பெண், ஜூலை 31-ம் தேதி திருமணம் செய்துள்ளார். தங்களுக்கு பாதுகாப்பு தேவை எனக்கோரி இருவரும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி, “ திருமணம் செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன் மணப்பெண் இந்து மதத்துக்கு மாறியுள்ளார், அதன்பின் திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்வதற்காக மட்டுமே மதம் மாறுவதை ஏற்க முடியாது" எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், கடந்த 2014-ம் ஆண்டில் நூர்ஜஹான் எனும் அஞ்சலி மிஸ்ரா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் மேற்கோள்காட்டி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, மாநிலத்தில் திருமணத்துக்காக நேர்மையற்ற முறையில் மதம் மாறுவதையும், இந்துப் பெண்களைக் காக்கவும், லவ் ஜிகாத்துக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவரப்படும் என்று முதல்வர் ஆதித்யநாத் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, லவ் ஜிகாத்தை தடுக்கும்வகையில் புதிய வரைவு சட்டமசோதா உருவாக்கப்பட்டது. இந்த வரைவு சட்ட மசோதாவுக்கு இந்த வாரத் தொடக்கத்தில் உ.பி. அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதன்படி, கட்டாயமாக மதமாற்றம் செய்தல், நேர்மையற்ற முறையில் குறிப்பாக திருமணத்துக்காக மதம் மாறுதல், லவ் ஜிகாத் ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சட்டமசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்லாமல் அதுபோன்று நடத்தப்படும் திருமணம் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்படும், திருமணத்துக்காக மதம் மாறினாலும் மதம் மாறிய பெண் தன்னுடைய மதத்தை மாற்ற விரும்பினாலும் அது சட்டப்படி ஏற்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சட்டம் குறித்து உ.பி. கேபினெட் அமைச்சர் சித்தார்த் நாத் சிங் முன்பு கூறுகையில் “திருமணத்தை அடிப்படையாக வைத்து 100க்கும் மேற்பட்ட கட்டாய மதமாற்றங்கள் நடந்துள்ளன. இந்த நேர்மையற்ற மதமாற்றத்தைத் தடுக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஓர் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

மைனர் சிறுமிகள், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களை கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறையும், ரூ.25 ஆயிரம் அபராதமும். ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றமாகவும் கருதப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வரைவு அவசரச் சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக உத்தரப்பிரதேச அரசு அனுப்பி இருந்தது. இந்த அவசரச்சட்டத்துக்கு ஆளுநர் ஆனந்தி பென்படேல் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x