Last Updated : 28 Nov, 2020 11:29 AM

 

Published : 28 Nov 2020 11:29 AM
Last Updated : 28 Nov 2020 11:29 AM

அவர் வேறு எங்கும் செல்லவில்லை: சுவேந்து அதிகாரியின் ராஜினாமா குறித்து திரிணமூல் எம்.பி.நம்பிக்கை

சுவேந்து அதிகாரி

கொல்கத்தா: 

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் இருந்து சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவர் கட்சியைவிட்டு வேறு எங்கும் செல்ல மாட்டார் என திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்.பி. சவுகாதா ராய் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றி வந்த சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அவரது போக்குவரத்து மற்றும் நீர்ப்பாசன துறைகள் மம்தா பானர்ஜி கைவசம் வந்தன.

திரிணமூல் காங்கிரஸில் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே கட்சி மற்றும் அமைச்சரவைக் கூட்டங்களைத் தொடர்ந்து தவிர்த்து வந்த சுவேந்து அவர் கலந்துகொண்ட நந்திகிராம் மற்றும் மிட்னாபூர் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில், அதிகாரி கட்சியின் சின்னம், கொடி அல்லது பேனர் இல்லாமல் பொதுக் கூட்டங்களை நடத்தியுள்ளார். மேலும், மாநிலத்தின் சில மாவட்டங்களிலும் சுவேந்துவின் படத்துடன் கூடிய சர்ச்சைக்குரிய வாசகங்களோடு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

பாஜக வரவேற்பு

கட்சியில் அதிருப்தியாக இருந்தபோதே ''சுவேந்துவுக்கு எப்போதும் பாஜக கதவுகள் திறந்தே இருக்கும்'' மேற்கு பாஜக சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தது.

சுவேந்து ராஜினாமா செய்துள்ளதை பாஜக வரவேற்பதாகவும் அவர் விரைவில் கட்சியில் இருந்தும் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைவார் எனவும் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

வேறு எங்கும் செல்லவில்லை

சுவேந்து பாஜக செல்ல வாய்ப்புள்ளதாக செய்திகள் பரவிவரும் நிலையில், இதனை திரிணமூல் காங்கிரஸ் மறுத்துள்ளது.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.சவுகாதா ராய் ஏஎன்ஐயிடம் கூறியதாவது:

அவர் (சுவேந்து அதிகாரி) கட்சியிலிருந்தோ அல்லது எம்.எல்.ஏ பதவியிலிருந்தோ ராஜினாமா செய்யவில்லை. அவர் டெல்லிக்கு செல்லவில்லை என்பது எனக்குத் தெரியும். அவர் மோகன் பகவத்தை சந்திப்பார் என்பது பொய். அவர் திரிணமூல் கட்சியிலிருந்து விலகவில்லை.

யாராவது கட்சியில் வருத்தப்பட்டால் அல்லது ஏதேனும் குறைகளைக் கொண்டிருந்தால், நாங்கள் அதை நிச்சயமாகத் தீர்ப்போம். நான் சுவேந்துஜியுடன் பேசுவேன், ஆனால் அவர் நிச்சயமாக வேறு எங்கும் செல்லவில்லை, இதை நான் உங்களுக்கு உறுதிப்படுத்த முடியும்.''

இவ்வாறு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.சவுகாதா ராய் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x